நீர் மேலாண்மையில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக தமிழகம்..! முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெருமிதம்..!
21 November 2020, 9:13 pmமத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தமிழகத்தில் பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டல் மற்றும் கட்டி முடிக்கப்பட்ட திட்டங்களைத் திறந்து வைத்த விழாவில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, தமிழகம் நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கும் மாநிலமாகத் திகழ்கிறது எனக் கூறினார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அரசு மற்றும் கட்சி சார்ந்த பணிகளுக்காக இன்று தமிழகம் வந்துள்ளார். சென்னையில் வீடியோ கான்பெரன்ஸ் முறையில் நடந்து கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட தலைவர்கள் முன்னிலையில், அமித் ஷா பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். மேலும் பல புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
அப்போது விழாவில் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக மற்றும் பாஜக இடையேயான கூட்டணி நீண்ட காலம் தமிழகத்தில் நீடிக்கும் என உறுதிப்படத் தெரிவித்துள்ளார். மேலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, நவீன கால சாணக்கியர் என வானளாவ புகழ்ந்தார்.
இதையடுத்து பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழாக மக்களில் நலனுக்காக அதிமுக அரசு, பல வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்தார்.
மேலும் நீர் மேலாண்மையில் இந்தியாவில் உள்ள இதர மாநிலங்களுக்கு தமிழகம் முன்னோடியாக திகழ்வதாவும், தமிழக அரசின் புதிய திட்டங்களால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருவதாகவும் கூறினார்.
மழை நீர் வீணாவதை தடுக்க பல முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதோடு, பருவகாலங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர் புதிய திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருவதாக எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.
அவர் மேலும், காவிரி – வைகை – குண்டாறு இணைப்புத் திட்டம் உள்ளிட்ட தமிழகத்தின் நதிநீர் இணைப்புத் திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதியளிக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதை வழிமொழிந்து எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணி வலுவாக இருப்பதாகக் கூறினார்.
0
0