உக்ரைனில் சிக்கி தவிக்கும் தமிழக மாணவர்கள் : மீட்டுத்தரக் கோரி பெற்றோர்கள் மனு…

Author: kavin kumar
27 February 2022, 5:30 pm
Quick Share

திருவாரூர் : உக்ரைன் நாட்டில் படித்துவரும் திருவாரூரைச் சேர்ந்த மாணவர்களை மீட்டுத்தரக் கோரி பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். 

திருவாரூர் காரைக்காட்டு தெருவை சேர்ந்த நைனார் முகமது என்பவரின் மகன் ஜெயினுல் ஆரிஃப் மற்றும் திருவாரூர் மாவட்டம் குடவாசல் விஷ்ணுபுரம் கிராமத்தைச் சேர்ந்த வைத்தியநாதன் மகள் அபிராமி ஆகியோர் உக்ரைனில் உள்ள கார்கிவ் நேஷனல் மெடிக்கல் யுனிவர்சிட்டியில் மருத்துவம் படித்து வருவதாகவும், உக்ரைனில் தற்போது போர் நடைபெற்று வருவதால் பதுங்கு குழிகளில் தஞ்சமடைந்து இருக்கும் அவர்களை மீட்டு தரவேண்டும் என பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். 

இதில்  திருவாரூர் காரைக்காட்டுத் தெருவைச் சேர்ந்த ஜெயினுல் ஆரிஃப் கார்கிவ் நேஷனல் மெடிக்கல் யூனிவர்சிட்டியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இவர் கடந்த டிசம்பர் 6ஆம் தேதி உக்ரைன் நாட்டிற்கு மருத்துவப் படிப்பிற்காக சென்றுள்ளார். இவரது தாய் ஷபானா திருவாரூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராக பணி புரிந்து வருகிறார். இந்த நிலையில் இவரது பெற்றோர்கள் தங்கள் மகன் பதுங்குகுழியில் தஞ்சமடைந்து உள்ளதாகவும், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு சிரமப்படுவதாகவும், அவர் தங்கியிருக்கும் இடத்திற்கு அருகில் தற்போது ரஷ்யப் படையினர் தாக்குதலில் ஈடுபட்டு வருவதாகவும், எனவே அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து தங்களது மகனை பத்திரமாக மீட்டு தரவேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். 

மேலும் இது குறித்து ஜெய்னுல் ஆரிபின் தந்தை நைனார் முகமது கூறுகையில், நாங்கள் கடந்த மூன்று நாட்களாக தூக்கம் இன்றி தவித்து வருகிறோம், அங்கு உள்ள மாணவர்கள் தரைவழியாக 1300 கிலோ மீட்டர் பயணித்தால் மட்டுமே உக்ரனை விட்டு வெளியேற முடியும் எனவே அரசு உரிய நடவடிக்கை எடுத்து மீட்டு தர வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.  இதேபோன்று குடவாசல் தாலுக்கா விஷ்ணுபுரம் கைக்கோலர் தெருவை சேர்ந்த அபிராமி என்பவர் உக்ரைனில் உள்ள கார்கிவ் நேஷனல் மெடிக்கல் யுனிவர்சிட்டியில் இரண்டாம் ஆண்டு மருத்துவம் பயின்று வருகிறார்.இவர் தற்போது பதுங்குகுழியில் தஞ்சமடைந்து உணவு மற்றும் பிற தேவைகளுக்காக சிரமப்படுவதால் அரசு உரிய நடவடிக்கை எடுத்து தங்களது மகளை மீட்டு தர வேண்டும் என அவரது தந்தை வைத்தியநாதன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

Views: - 445

0

0