சித்திரை முதல்நாள் தான் தமிழ் புத்தாண்டு : முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய இணையமைச்சர் முருகன் பதிலடி!!

Author: Udayachandran RadhaKrishnan
12 January 2022, 1:34 pm
Murugan Byte - Updatenews360
Quick Share

கோவை: தமிழகத்தில் 4,080 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 11 மருத்துவ கல்லூரிகளால் 1450 கூடுதல் இடங்கள் தமிழகத்திற்கு கிடைத்துள்ளதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மருத்துவ கல்லூரி திறப்பு விழாவில் பங்கேற்க தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை மத்திய இணையமைச்சர் எல்.முருகன் விமானம் மூலம் கோவை வந்தார். தொடர்ந்து அங்கிருந்து சாலை மார்க்கமாக அவர் திருப்பூர் செல்கிறார்.

முன்னதாக, விமான நிலைய வாயிலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: இன்று வரலாற்று சிறப்பு மிக்க நாள். தமிழகத்தில் 11 மருத்துவ கல்லூரிகள் இன்று ஒரே நேரத்தில் திறக்கப்படுகின்றது.

4080 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மருத்துவ கல்லூரிகளால் 1450 கூடுதல் இடங்கள் தமிழகத்திற்கு கிடைத்துள்ளது. இதே போல செம்மொழி தமிழ் ஆய்வு மையம் இன்று 20 கோடி மதிப்பீட்டில் திறக்கப்பட்டுள்ளது.

திருக்குறளை பிரதமர் முன்னிலைபடுத்தி வருகின்றார். விவேகானந்தர் பிறந்த தினத்தை தேசிய இளைஞர் தினமாக கொண்டாடிக்கொண்டு இருக்கின்றோம். என்றார்.

ஆல் இந்தியா ரேடியோ மூடப்படுமா என்ற கேள்விக்கு, “ஆல் இந்தியா ரேடியோ மூடப்படாது. தொழில்நுட்ப மேம்படுத்துதல் மட்டுமே நடக்கின்றது.” என்றார். முதல்வரின் தமிழ்புத்தாண்டு குறித்த கேள்விக்கு , அனைவருக்கும் தமிழ்புத்தாண்டு சித்திரை ஓன்றுதான் என கூறினார்.

11 மருத்துவகல்லூரிகள் மட்டுமின்றி தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி பணிகளும் நடைபெற்று வருகின்றது. அதற்கென ஒரு காலவரம்பு இருக்கின்றது. தமிழகத்தற்கு எய்ம்ஸ் மருத்துவமனை வரும். கட்டாயம் தமிழக மக்கள் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவார்கள். டி.டி தொலைக்காட்சி நிறுவனத்திற்கு குரூப் 1 அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனர் என்றார்.

Views: - 223

0

0