மேகதாது அணையை அனுமதிக்காதீர்கள்.. பிரதமருக்கு காவிரி டெல்டா பாசன விவசாயிகள் கடிதம்…!!!

Author: Babu Lakshmanan
11 September 2021, 1:29 pm
letter - updatenews360
Quick Share

மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடகாவிற்கு அனுமதி வழங்கக் கூடாது என்று பிரதமர் மோடிக்கு காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் கடிதம் எழுதியுள்ளனர்.

குளித்தலை பகுதி காவிரி டெல்டா பாசன விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பாக பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு, கர்நாடக மாநிலம் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு அனுமதி வழங்க வேண்டாம் என்று குளித்தலை தலைமை அஞ்சலகம் மூலமாக கடிதம் அனுப்பியுள்ளனர்.

அக்கடிதத்தில் கூறியிருப்பதாவது :- கர்நாடக அரசு பெங்களூரில் இருந்து 90 கிலோ மீட்டர் தொலைவிலும் தமிழக எல்லைக்கு 4 கிலோமீட்டர் முன்னதாக ரமாநகரா மாவட்டத்தில் மேகேதாட்டுவில் ஒரு நீர்த்தேக்கத்தை நிர்மாணிப்பதற்கான திட்டங்கள் பற்றிய விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பியதை நாம் அனைவரும் நன்கு அறிவோம். மேகதாது அணை தமிழகத்திற்கு நன்மை பயக்கும் என்றும் கர்நாடக மாநிலம் கூறினாலும், மேகதாது மண்டலம் காவிரியிலிருந்து தண்ணீர் கீழ்மாநிலமான தமிழகம் நோக்கி செல்லும் இறுதியான தடையற்ற பகுதியாகும்.

எனவே, அங்கு அணை கட்டுவதால் தமிழகத்தின் நியாயமான பங்கு தண்ணீரை விடுவிக்க கர்நாடகத்தை நம்பி இருக்கும் நிலைக்கு தள்ளப்படும். புதிய அணை கட்டப்பட்டால் கர்நாடகா தமது தேவைக்கு போக மிஞ்சிய அளவு நீரை மட்டுமே தமிழகத்திற்கு திறந்து விடும் எனவே தமிழக விவசாயிகள் மற்றும் தமிழக மக்கள் கர்நாடக மேகதாதுவில் புதிய அணை கட்டும் முயற்சியை எதிர்க்கிறோம்.

ஆகவே, மாண்புமிகு பிரதமர் எங்கள் கோரிக்கையை பரிசீலித்து கர்நாடகா மாநிலம் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எந்த அனுமதியும் வழங்க வேண்டாமென கேட்டுக்கொள்கிறோம். மேலும், எங்கள் கோரிக்கையை வலியுறுத்தும் வகையில் 3000 விவசாயிகள் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் ஆகியோரின் கையெழுத்துக்களை தங்கள் மேலான பார்வைக்கு இணைத்துள்ளோம். தயவுகூர்ந்து தமிழக விவசாயிகள் மற்றும் விவசாயத்தை காப்பாற்றுங்கள் என தங்களை பணிந்து வேண்டுகிறோம், என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் கையெழுத்து இயக்க நிகழ்ச்சியினை சமூக ஆர்வலர்கள் அகிலா மெடிக்கல் முருகானந்தம் குளித்தலை சுந்தர் மற்றும் கல்யாணி கவரிங் மது ஆகியோர் ஏற்பாடு செய்து இருந்தனர்.

Views: - 243

0

0