திமுக அரசின் முதல் பட்ஜெட்டில் வரிவிதிப்புகள் பெருமளவு இடம்பெறுவது உறுதி : வெள்ளை அறிக்கை குறித்து கிருஷ்ணசாமி கருத்து.!!

Author: Babu Lakshmanan
9 August 2021, 1:34 pm
ptr - krishnasamy - updatenews360
Quick Share

சென்னை : பட்ஜெட்டில் வரிகள் பெருமளவு உயர்த்தப்படுவதை வெள்ளை அறிக்கையில் மறைமுகமாக சொல்லப்பட்டிருப்பதாக புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் அதிமுகவின் கடந்த 10 ஆண்டுகால ஆட்சியின் போது நிதிநிலை மோசமாக இருந்ததாகவும், கடன் அதிகளவு வாங்கப்பட்டிருப்பதாகவும் அப்போதைய எதிர்கட்சியாக இருந்த திமுக தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தது. மேலும், திமுக ஆட்சியமைந்தால் நிதி நிலை தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. நிதியமைச்சராக பழனிவேல் தியாகராஜன் பொறுப்பேற்றுக் கொண்டார். ஆட்சியமைந்து 100 நாட்களை நெருங்க உள்ள நிலையில், கடந்த 10 ஆண்டுகால நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கையை சென்னையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று வெளியிட்டார்.

PTR - updatenews360

அதில், அவர் கூறியிருப்பதாவது :- நடப்பு நிதி ஆண்டின் இடைக்கால நிதிநிலை மதிப்பீடுகளின்படி தமிழகத்தின் மொத்த கடன் ரூ.5.70 லட்சம் கோடியாகும். கடந்த 5 ஆண்டுகளில் ரூ.39,079 கோடி மறைமுக கடனாக எடுக்கப்பட்டுள்ளது. வரி அல்லாத வருமானம் முந்தைய திமுக ஆட்சியில் 1% ஆக இருந்தது. இது கடந்த 10 ஆண்டுகளில் 0.7%ஆக குறைந்துள்ளது. 2008-09 ஆண்டில் 13.35% ஆக இருந்த மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, 2020-21ம் ஆண்டில் 8.7% ஆக குறைந்துள்ளது. உற்பத்தியில் இருந்து கிடைக்கும் வருவாய் 28% சரிந்துள்ளது.

வணிக வரியில் இருந்து வரும் வருமானம் 4.19% குறைந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் மாநில வரி வருவாய் வளர்ச்சி 4.4 %ஆக சரிந்துள்ளது. வெளிநாடுகளில் வரி அதிகமாக விதிக்கப்படுவதால் மக்கள் நல திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. 2014க்கு பிறகு மின்சார கட்டணமும் உயர்த்தப்படாமல் இருக்கிறது. அதேபோல, பல ஆண்டுகளாக சொத்து வரியையும் உயர்ந்தவில்லை.

தமிழகத்தில் நகராட்சி, மாநகராட்சி ஆகிய உள்ளாட்சி அமைப்புகள் செலுத்த வேண்டிய 1200 கோடி ரூபாய் மின்சார கட்டணம் செலுத்தாமல் வைத்துள்ளன. தமிழ்நாடு அரசு ஒரு நாள் வட்டியாக 87.31 கோடி ரூபாயை செலுத்துகிறது. தமிழகத்தில் 1 கி.மீ. தூரம் பொது போக்குவரத்து இயங்கினால் ரூ.59.15 இழப்பு ஏற்படுகிறது, எனக் கூறினார்.

தமிழக அரசுக்கு கடன் மற்றும் வருவாய் பற்றாக்குறை இருப்பது வெள்ளை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தாலும், வரி இனங்களை உயர்த்தப்படாமல் இருப்பதும் வருவாய் பற்றாக்குறைக்கு காரணம் என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார். இதனால், எதிர்வரும் பட்ஜெட் தாக்கலில் வரி இனங்களின் கட்டணம் உயர்த்தப்படும் என்ற அச்சம் பொதுமக்களின் மத்தியில் எழுந்துள்ளது.

ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வால் விழிபிதுங்கியுள்ள மக்கள், கொரோனா சமயத்தில் வாழ்வாதாரத்தை இழந்துள்ள இந்த சமயத்தில் வரி இனங்களின் கட்டணம் அதிகரித்தால் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்பதில் சந்தேகமும் இல்லை.

இந்த நிலையில், திமுக அரசு தாக்கல் செய்யவிருக்கும் பட்ஜெட்டில் வரிகள் பெருமளவு உயர்த்தப்படுவதை வெள்ளை அறிக்கையில் மறைமுகமாக சொல்லப்பட்டிருப்பதாக புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “திமுக தனது தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியாததற்கான காரணம் தேடும் வெற்று அறிக்கையாகவே இன்றைய வெள்ளை அறிக்கை உள்ளது. திமுகவின் பட்ஜெட்டுக்கு முன்பான வெள்ளை அறிக்கை வாண வேடிக்கையாக இருக்கும் என பெரிது எதிர்பார்க்கப்பட்டது; ஆனால் புஷ்வாணமாகி விட்டது.

வரி விதிப்பு இல்லாத ஜீரோ பட்ஜெட் இருக்க முடியாது என்று சொல்வதன் மூலம், 13-ஆம் தேதி பட்ஜெட்டில் பெரிய அளவிற்கு வரி விதிப்புக்கள் உண்டு என்பதை சொல்லாமல் சொல்வதாகவே உள்ளது,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 638

0

0