பாலத்தின் பக்கவாட்டு சுவரில் படுத்து தூங்கிய ஆசிரியர்… கணப்பொழுதில் நடந்த சம்பவம் ; அதிர்ச்சி சிசிடிவி காட்சி

Author: Babu Lakshmanan
15 March 2024, 3:52 pm

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி வள்ளியாற்று பாலம் பக்கவாட்டு சுவரில் படுத்துறங்கிய பள்ளி அறிவியல் ஆசிரியர் பள்ளத்தில் தவறி விழுந்து பலியான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி வள்ளியாறு பாலம் பகுதியில் உள்ள சுமார் 12அடி பள்ளத்தில் காலை ரத்த கறைகளுடன் ஒரு ஆண் சடலம் கிடப்பதாகவும், பக்கவாட்டு சுவர் அருகே ஒரு இருசக்கர வாகனமும் நிற்பதாகவும் மணவாளக்குறிச்சி போலீசாருக்கு அப்பகுதி பொதுமக்கள் தகவல் கொடுத்துள்ளனர்.

தகவல் அறிந்து வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி அந்த நபர் யார் எப்படி உயிரிழந்திருக்கலாம் என அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சி பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

விசாரணையில் இருசக்கர வாகனத்தில் வந்த அவர் அந்த பகுதி சாலையிலேயே வாகனத்தை நிறுத்தி விட்டு வள்ளியாற்று பாலத்தின் பக்கவாட்டு சுவரில் படுத்து உறங்கியதும், உறக்கத்தில் இருந்த அவர் உருண்டு புரளும் போது தலைகுப்பற 12அடி ஆழ பள்ளத்தில் விழுவதும் பதிவாகியிருந்தது.

தொடர் விசாரணையில் அவர் மணலிக்கரை பகுதியை சேர்ந்த சேவியர் (51) என்பதும், அந்த பகுதியில் உள்ள அரசு உதவிப்பெறும் தனியார் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வந்ததும், நேற்றிரவு வீட்டில் இருந்து மண்டைக்காடு கோயிலுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பாததும் தெரியவந்தது.

இதனையடுத்து, சடலத்தை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த மணவாளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், ஆற்று பாலத்தின் பக்கவாட்டு சுவரில் படுத்து உறங்கிய ஆசிரியர் தலைகுப்புற பள்ளத்தில் தவறி விழும் சிசிடிவி காட்சி பதிவுகளும் தற்போது வெளியாகியுள்ளது.

  • Pushpa 2 Release and Reviews புஷ்பா 2 படத்தின் முதல் விமர்சனம்..பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
  • Views: - 948

    0

    0