12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை : பெயிண்டர் கல்லால் அடித்துக்கொலை.. தாய்மாமன் உள்பட இருவர் கைது

Author: Babu Lakshmanan
20 November 2021, 9:43 am
tenkasi murder -updatenews360
Quick Share

தென்காசி : கடையநல்லூர் அருகே 12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பெயிண்டர் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இருவரை போலீசார் கைது செய்தனர்

தென்காசி மாவட்டம் கடையநல்லூர்அருகே மேலக்கடையநல்லூர் வேதக் கோயில் தெற்கு தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் கோபால் (55). இவர் பெயிண்டர் வேலை செய்து வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த வெளிநாட்டில் வேலை பார்க்கும் கிருஷ்ணசாமியின் 12 வயது மகளிடம் பாலியல் சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த சிறுமி புளியங்குடி சிந்தாமணியில் உள்ள தனது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தது.

நேற்று மாலை அங்கு வந்த சிறுமியின் தாய் மாமன் புளியங்குடி சிந்தாமணி, அம்பேத்கர் 2வது தெருவில் வசிக்கும் கருப்பையா மகன் மாரி பாண்டி (32) மற்றும் இவரது உறவினர் மேலக்கடையநல்லூர் வேதக்கோவில் தெருவில் வசிக்கும் சாமிநாதன் மனைவி வேல் தாய் ஆகியோர், அங்கு வந்து தாலுகா அலுவலகத்திற்கு எதிரில் உள்ள சுடுகாட்டுக்கு அருகே ஒரு வீட்டில் பெயிண்ட் வேலை செய்து கொண்டிருந்த கோபாலிடம், வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இருவருக்கும் வாக்குவாதம் முற்றவே கைகலப்பு ஆனது. ஒருகட்டத்தில் கோபத்தில் கோபால் மீது அந்தப் பெண்ணின் தாய் மாமன் மாரி பாண்டி பெரிய பாறாங்கல்லை தூக்கி தலையில் போட்டுள்ளார். இதில், படுகாயமடைந்த கோபால் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இதனை அருகில் உள்ளவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வைரலாக பரப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கடையநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் சப் இன்ஸ்பெக்டர் கனகராஜ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். கோபாலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த பயங்கர கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து மாரிபாண்டி, அவருடைய உறவினர் வேலு தாய் ஆகியோரை கைது செய்தனர். இந்தக் கொலை எதனால் நடந்தது என்பது குறித்து காவல்துறை தீவிரமாக விசாரித்து வருகிறது. இறந்த கோபாலுக்கு இரண்டு மனைவிகள் ஒரு மகன் உள்ளனர். பெயிண்டர் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 490

0

0