ஆசிரியர் தகுதி தேர்வு சான்றிதழை வாழ்நாள் முழுவதற்கும் நீடிக்க வேண்டும் : ராமதாஸ் வலியுறுத்தல்

Author: Babu Lakshmanan
10 August 2021, 5:34 pm
Quick Share

சென்னை : ஆசிரியர் தகுதி தேர்வு சான்றிதழை வாழ்நாள் முழுவதற்கும் நீடிக்க வேண்டும் என்று தமிழக அரசு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் அரசு பள்ளி ஆசிரியர்கள் நியமனத்திற்கு தகுதி பெறுவதற்கான தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு விரைவில் ஆன்லைனில் நடத்தப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழின் செல்லுபடியாகும் காலத்தை ஆயுள்காலமாக மாற்றுவது குறித்து தமிழக அரசு இன்னும் முடிவெடுக்காத நிலையில், அடுத்தத் தேர்வை நடத்துவது எந்தவகையிலும் நியாயமல்ல.

இத்தேர்வுகளில் வெற்றி பெறுபவர்களுக்கு அடுத்த 7 ஆண்டுகளுக்குள் ஆசிரியர் பணி கிடைக்காவிட்டால், மீண்டும் தகுதித்தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும். ஆனால், 2013-ம் ஆண்டு தேர்வு எழுதியவர்களுக்கு 2014-ம் ஆண்டு முடிவு அறிவிக்கப்பட்டு, சான்றிதழ் வழங்கப்பட்ட நிலையில், அடுத்த 7 ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டில் இடைநிலை ஆசிரியர் நியமனமே நடைபெறவில்லை.

இத்தகைய சூழலில் அவர்களின் ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் இம்மாத இறுதியுடன் காலாவதி ஆகிறது. 2013-ம் ஆண்டு தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் அடுத்த 7 ஆண்டுகளுக்குள் ஆசிரியர் பணியில் சேர முடியாதது அவர்களின் தவறு அல்ல; அரசின் தவறு தான். ஒவ்வொரு கல்வியாண்டும் ஆசிரியர் நியமனங்கள் நடைபெற்றிருந்தால் அவர்களுக்கு வேலை கிடைத்திருக்கும்.

தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்று ஆசிரியர் பணிக்காக 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கடந்த 7 ஆண்டுகளாக காத்திருக்கின்றனர். தகுதிச் சான்றிதழின் ஆயுள் நீட்டிக்கப்படாவிட்டால், அவர்களின் அரசு பள்ளி ஆசிரியர் கனவு சிதைந்து விடும்.

வயது உள்ளிட்ட காரணங்களால் அவர்களால் மீண்டும் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி ஆசிரியர் பணியில் சேருவது சாத்தியமற்றது. ஆசிரியர் தகுதிச் சான்றிதழை வாழ்நாள் முழுவதும் செல்லத்தக்கதாக மாற்ற வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கை மிகவும் சாதாரணமானது; அதே நேரத்தில் மிகவும் முக்கியமானது. இதையும், அவர்களின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும் என்ற அறிவிப்பை அரசு உடனடியாக வெளியிட வேண்டும், என தெரிவித்துள்ளார்.

Views: - 384

0

0