தமிழகத்தில் விரைவில் மிகப்பெரிய அரசியல் மாற்றம் : அண்ணாமலை வைத்த “SURPRISE“
17 September 2020, 6:07 pmதிருப்பூர் : மேற்கு வங்கம் மற்றும் திரிபுராவில் நடைபெற்றது போல் தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் மாற்றம் நடைபெறும் என பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணை தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு வெள்ளகோவில் பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் புதிய கல்விக்கொள்கையை ஆதரித்து தொடர் ஜோதி ஊர்வலம் நடைபெற்றது.
பின்னர் பேருந்து நிலையம் எதிரில் கொடியேற்றும் விழாவில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும் தற்போது பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணை தலைவர் அண்ணாமலை கொடியேற்றி சிறப்புரையாற்றினார். இவ்விழாவில் 150க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, அதிமுக மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் இடையே ஆரோக்கியமான விவாதம் மட்டுமே நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும், வார்த்தைப் போர் நடைபெறவில்லை எனவும் தெரிவித்தார். திமுகவில் உள்ள முக்கிய தலைவர்கள் 47 பேர் நடத்தும் பள்ளிகளில் சிபிஎஸ்சி பள்ளிகளில், இந்தி ஒரு மொழியாக நடத்தப்படுகின்றது.
திமுகவை பொறுத்தவரை வீட்டுக்கு மும்மொழி நாட்டுக்கு இரண்டு மொழி என்றும் நாடு நாசமாக போகவேண்டும் என்பது தான் அவர்களின் ஒரே எண்ணம் என்றார். மேலும் எட்டு மாதத்தில் மிகப்பெரிய அரசியல் மாற்றம் தமிழகத்தில் வரும் எனவும், மேற்கு வங்கம் மற்றும் திரிபுராவில் நடை பெற்றது போல் இங்கும் நடைபெறும் எனவும் தெரிவித்தார். தேர்தல் கூட்டணி குறித்து பாஜக மேலிடம் தான் முடிவு செய்யும் எனவும் கூறினார்.
இன்றைய சூழலில் பாரதீய ஜனதா கட்சியை இளைஞர்கள் மிகவும் புனிதமான கட்சியாக பார்க்கின்றனர் மேலும் இளைஞர்களுக்கு வாய்ப்புககொடுக்கின்ற கட்சியாக பார்க்கின்றனர் என்றார்.இந்நிகழ்ச்சியில் 150க்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.