பெற்றோர்களே கவனமா இருங்க…விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் திடீர் மாயம்: தண்ணீர் தொட்டியில் விழுந்து பலியான சோகம்..!!

Author: Rajesh
27 April 2022, 3:41 pm
Quick Share

கோவை: மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள தாசம்பாளையம் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுவன் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள தாசம்பாளையம் வெள்ளீஸ்வரன் மலை பகுதியை சேர்ந்தவர் சரத் குமார்(26). இவருக்கும் வனஜா (23) என்பவருக்கும் திருமணம் ஆகி ஹரி விக்னேஷ் என்ற 3 வயது குழந்தை உள்ளது.

இந்நிலையில் நேற்று மாலை 5 மணிக்கு அப்பகுதி சிறுவர்கள் வீட்டின் அருகே உள்ள சரத்தின் பெரியம்மா உமாபதி வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது அருகே இருந்த தண்ணீர் தொட்டியில் குழந்தை ஹரி விக்னேஷ் தவறி விழுந்து விட்டார்.

நீண்ட நேரமாகியும் மகனை காணவில்லை என்று பெற்றோர்கள் அக்கம்பக்கத்தில் தேடி கொண்டிருந்தனர். இந்த நிலையில் தனது பெரியம்மா உமாபதி வீட்டு முன்பு உள்ள தண்ணீர் தொட்டியில் தனது மகன் தவறி விழுந்தது தெரியவந்தது. இதையடுத்து குழந்தையை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மேட்டுப்பாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த மேட்டுப்பாளையம் போலீசார் இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் தண்ணீர் தொட்டியில் விழுந்து பலியான சம்பவம் தாசம்பாளையம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 690

0

0