ஒன்றரை வயது ஆண் குழந்தையை பெட்ரோல் ஊற்றி எரித்த தந்தை : கஞ்சா போதையில் நடந்த கொடூரம்..!

30 August 2020, 4:34 pm
Quick Share

ராமநாதபுரம் மாவட்டத்தில் மது மற்றும் கஞ்சா போதையில் ஒன்றரை வயது ஆண் குழந்தையை பெட்ரோல் ஊற்றி தந்தையே எரித்துக்கொன்ற கொடூரம் அரங்கேறியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தை அடுத்துள்ளது வேதாளை நாகநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் முனியசாமி. இவருக்கும் பாம்பன் அக்காள்மடம் பகுதியைச் சேர்ந்த மரிய அவிஷ்டா என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகி ஒன்றரை வயதில் ஆண் குழந்தை இருந்துள்ளது.

இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் மரிய அவிஷ்டாவின் தங்கை திருமணம் அக்காள்மடத்தில் நடந்தது. திருமணத்திற்கு குடி மற்றும் கஞ்சா போதையில் வந்திருந்த முனியசாமி, மனைவி மரிய அவிஷ்டாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும், தனது குழந்தையை தருமாறு வாக்குவாதம் செய்துள்ளார். மரிய அவிஷ்டா குழந்தையைத் தர மறுக்கவே, அவரைத் தாக்கிவிட்டு குழந்தையைத் தூக்கி சென்றுள்ளார் முனியசாமி.

இந்நிலையில் அன்று இரவு மரிய அவிஷ்டா, வீடு திரும்பியபோது முனியசாமியும், குழந்தையும் அங்கு இல்லை. சிறிது நேரத்திற்கு பின் முனியசாமி மட்டும் வீட்டுக்கு வந்துள்ளார். அவரிடம் குழந்தை குறித்து மரிய அவிஷ்டா கேட்டபோது, குழந்தை ஒரு இடத்தில் இருப்பதாகச் சொல்லி நாடகமாடியுள்ளார். மறுநாள் காலையிலும் முனியசாமி, குழந்தையைக் கொண்டு வரவில்லை. இதனால், சந்தேகம் அடைந்த மரிய அவிஷ்டா இதுகுறித்து மண்டபம் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

மண்டபம் போலீஸார் முனியசாமியைப் பிடித்து விசாரித்தபோது, அப்பகுதியில் உள்ள ரயில் தண்டவாளம் அருகே இருந்த கருவேல மரங்கள் நிறைந்த பகுதியில் தனது குழந்தையைக் கொலை செய்து தீ வைத்து எரித்ததாக கூறியுள்ளார். இதையடுத்து அப்பகுதிக்கு சென்ற போலீஸார் எரிந்து கருகிய நிலையில் கிடந்த குழந்தையின் உடலைக் கைப்பற்றினர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த மண்டபம் போலீஸார், முனியசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 43

0

0