தருமபுரியில் 1000 ஏக்கர் பரப்பளவில் முதற்கட்டமாக சிப்காட் தொழிற்பேட்டை: அமைச்சர் கே.பி.அன்பழகன் பேச்சு

20 September 2020, 4:52 pm
kp anbalagan- updatenews360
Quick Share

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் 1000 ஏக்கர் பரப்பளவில் முதற்கட்டமாக சிப்காட் தொழிற்பேட்டையில் அமைக்கப்படும் என நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் உயர் கல்விதுறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.

தருமபுரியை அடுத்த இலக்கியம்பட்டி அரசு ஆண்கள் மேல் நிலை பள்ளியில் நடந்த முதியோர் உதவி தொகை, இலவச வீட்டு மனை பட்டா, விதவை மற்றும் இயற்கை மரணம், திருமண உதவி தொகையை தமிழக உயர் கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு வழங்கினார். ஆதனை தொடர்ந்து அவர் பேசியதாவது:- தமிழகத்தில் பள்ளிக் கல்வியில் மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு இடைநிற்றலை தடுக்கும் வகையில், தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் காரணத்தினால் பள்ளிப்படிப்பு முடித்து உயர்கல்வியில் சேரும் மாணவர்கள் சதவீதம் அதிகரித்து வருகிறது.

அனைவரும் உயர்கல்வியில் சேர வேண்டும் என்ற நோக்கில் தமிழக அரசு 1666 புதிய பாடப் பிரிவுகளை அரசு கல்லூரிகளில் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட நகரங்களுக்கு சென்று உயர்கல்வி பயிலும் நிலை மாறி தற்போது தேவைப்படும் இடங்களில் எல்லாம் புதிய அரசு கல்லூரிகள் தொடங்கப்பட்டு வருகிறது. தமிழக உயர்கல்வித் துறை சார்பில் 92 புதிய அரசு கல்லூரிகள் தொடங்கப்பட்டு உள்ளது. மேலும் தமிழகத்தில் புதிதாக 6 இடங்களில் சட்டக் கல்லூரிகளும், 11 இடங்களில் மருத்துவக் கல்லூரிகளும் தொடங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் நலனில் அக்கறை கொண்டு அவர்களுக்கு தேவையான உதவி உபகரணங்கள் நவீன முறையில் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது புதிதாக நடக்க முடியாத நிலையில், உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் ஒரு லட்சம் மதிப்பில் பேட்டரியால் இயங்கும் வாகனம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த வாகனத்தை மாற்றுத்திறனாளிகளே இயக்கம் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் வேலை வாய்ப்பை உருவாக்கும் நோக்கிலும் தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தும் நோக்கிலும் 1734 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என்று அரசு அறிவித்தது. தேர்வு செய்யப்பட்ட நிலங்களின் இடையில் 550 ஏக்கர் அளவில் பட்டா நிலங்கள் உள்ளது. பட்டா நிலகளை கையப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இதற்கிடையில் அரசு புறம்போக்கு நிலமாக உள்ள 990 ஏக்கர் பரப்பளவில் முதற்கட்டமாக சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் ஜவுளி பூங்கா அமைப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்காக அமைக்கப்பட்ட தொழில் துறை செயலாளர் தலைமையிலான சிறப்பு குழு அன்மையில் தருமபுரி வருகை புரிந்து உரிய இடத்தை நேரில் ஆய்வு செய்து சென்றுள்ளனர். இதன்மூலம் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வழிவகை ஏற்படும். இவ்வாறு அவர் பேசினார்.