வெங்காய வியாபாரியை கடத்திய கும்பல் : கடனை திருப்பி செலுத்தாதால் வெறிச்செயல்!!

10 October 2020, 10:59 am
Kidnpaped - Updatenews360
Quick Share

திருப்பூர் : குண்டடம் அருகே வெங்காயம் வாங்கிவிட்டு பணத்தை திருப்பி தராத சகோதரர்களில் ஒருவரை மண்டி உரிமையாளர் காரில் கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே குண்டடத்தை அடுத்துள்ள பொட்டிக்காம்பாளையத்தை சேர்ந்தவர் தங்கவேல். இவரது மகன்கள் ரமேஷ் (வயது 30), கார்த்தி (வயது 26). சகோதரர்களான இவர்கள் 2பேரும் வெங்காய வியாபாரம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திண்டுக்கல்லைச் சேர்ந்த வெங்காய மண்டி உரிமையாளர் வெங்கடேஷ் (வயது 50) என்பவரிடம் 7 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கு ரமேஷ் மற்றும் கார்த்தி ஆகியோர் வெங்காயம் கொள்முதல் செய்ததாக கூறப்படுகிறது.

இதற்கான பணத்தை கொடுக்கவில்லை என தெரிகிறது.அதற்கான தொகையை பலமுறை கேட்டும் கொடுக்காத நிலையில் நேற்று முன்தினம் இரவு 3 பேருடன் பொட்டிக்காம்பாளையம் சென்ற வெங்கடேஷ், அங்கு வீட்டிலிருந்த கார்த்தியிடம் பணம் கேட்டுள்ளார். பின்னர் திடீரென கார்த்தியை காரில் ஏற்றி கடத்திச்சென்றுவிட்டனர்.

இதுபற்றி கார்த்தியின் அண்ணன் ரமேஷ் குண்டடம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) வனிதாமணி மற்றும் போலீசார் திண்டுக்கல் சென்று கடத்திச் செல்லப்பட்ட கார்த்தியை மீட்டனர்.

அத்துடன் பணத்தகராறில் அவரைக் கடத்திச் சென்ற திண்டுக்கல்லை சேர்ந்த வெங்காய மண்டி உரிமையாளர் வெங்கடேஷ், அதே பகுதியைச் சேர்ந்த வெங்காய புரோக்கர் பாண்டி, மண்டியில் வேலை செய்து வரும் பாக்கியசபரி, அருண் ஆகியோரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 4 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Views: - 43

0

0