வாரிசு சான்றிதழ் கேட்டு சென்ற பெண்ணை தகாத வார்த்தைகளில் பேசிய அரசு அதிகாரி: நடவடிக்கை எடுக்குமா நிர்வாகம்…???

2 September 2020, 5:36 pm
Quick Share

காஞ்சிபுரம்: வாரணவாசி அருகே வாரிசு சான்றிதழ் கேட்டு சென்ற பெண்ணை தகாத வார்த்தைகளில் பேசிய வருவாய் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க மூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் வாரணவாசி அடுத்த தொள்ளாழி கிராமத்தை சேர்ந்த குப்பன் என்பவர் அரசு மதுபானக் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 1998-ஆம் ஆண்டு மாற்று சமூகத்தை சேர்ந்த மல்லிகா என்ற பெண்ணை காதலித்து முறைப்படி பதிவு அலுவலகத்தில் கலப்பு திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப் பின்னர் குப்பனின் பெற்றோர்கள் வசித்து வந்த வீட்டின் பின்புறத்தில் தனது மனைவி மல்லிகாவுடன் 21 ஆண்டுகள் குப்பன் வசித்து வந்துள்ளார்.

குப்பன் மல்லிகா தம்பதிகளுக்கு குழந்தைகள் ஏதும் இல்லாத நிலையில் , கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு மஞ்சள் காமாலை வியாதி ஏற்பட்டு சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் குப்பன் உயிரிழந்தார். இந்நிலையில் வாரிசு சான்றிதழ் வாங்குவதற்காக வாரணாசியில் உள்ள கிராம நிர்வாக அலுவலரையும் வருவாய் அலுவலரையும் சந்தித்து மல்லிகா மனு அளித்துள்ளார்.

இவர் அளித்த மனுவின் மீது கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர் ஆகியோர் சுமார் 350 நாட்களுக்கும் மேலாக எந்தவிதமான விசாரணையும் செய்யாமல் அலைக்கழித்து வந்துள்ளார்கள். சில மாதங்களுக்கு முன் மீண்டும் வருவாய் அலுவலர் சங்கீதாவை சந்தித்து வாரிசு சான்றிதழை மல்லிகா கேட்டுள்ளார். ஆவேசமடைந்த வருவாய் ஆய்வாளர் சங்கீதா மல்லிகாவை பார்த்து குப்பனுக்கு நீ மூன்றாவது பொண்டாட்டியா அல்லது நான்காவது பொண்டாட்டியா என கிண்டலாக கேட்டதால் மல்லிகா மிகவும் அதிர்ச்சியுற்றார்.

பின்னர் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுவின் மீது மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் நாராயணன் விசாரணை செய்து அனைத்து ஆவணங்களும் சரியாக உள்ளதால் இவர்களுக்கு வாரிசு சான்று வழங்கலாம் என வருவாய் துறையினரிடம் தெரிவித்துள்ளார். வாரிசு சான்றிதழ் வழங்கலாம் எனக் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூறியும் இந்த நிமிடம் வரை வருவாய் ஆய்வாளர் வாரிசு சான்றிதழை அளிக்காமல் மல்லிகாவை அலைகழித்து வருகின்றார்.

காதலித்து கலப்பு பதிவு திருமணம் செய்து 21 ஆண்டுகள் குழந்தைகள் இல்லாமல் வாழ்ந்து தற்போது கணவனையும் மஞ்சள்காமாலை வியாதிக்கு பறிகொடுத்து விட்டு வாரிசு சான்றிதழ் வாங்க முடியாமல் தவிக்கும் விதவை பெண் மல்லிகாவுக்கு மாவட்ட நிர்வாகம் தலையிட்டு வாரிசு சான்று உடனே வழங்க வேண்டும் என்றும், அந்த பெண்ணை தகாத வார்த்தைகளில் பேசிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

Views: - 5

0

0