மாணவனுக்கு மறுபிறவி கொடுத்த செவிலியர்:CPR சிகிச்சை செய்து இதயத்துடிப்பை மீட்ட நெகிழ்ச்சி சம்பவம்!!

Author: Udhayakumar Raman
4 December 2021, 6:56 pm
Quick Share

திருவாரூர் : மன்னார்குடியில் சாலை விபத்தில் சிக்கிய கல்லூரி மாணவருக்கு CPR முதலுதவி சிகிச்சை அளித்து காப்பாற்றிய செவிலியர் வனஜாவிற்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்ரமணியன் உள்ளிட்ட பலரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த கோட்டூர்தோட்டத்தை சேர்ந்த செவிலியர் வனஜா மன்னார்குடி அரசு மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார்.அவர் நேற்று மதுக்கூர் அருகே உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு தனது குடும்பத்தினருடன் காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். மன்னார்குடி அருகே 6-நம்பர் வாய்க்கால் பகுதியில் வந்து கொண்டிருக்கும் போது இளைஞர் ஓட்டிசென்ற இருசக்கர வாகனத்தின் குறுக்கே ஆடு ஒன்று வந்ததால் ஆட்டின் மீது இருசக்கர வாகனம் மோதி இளைஞர் பலத்த காயமடைந்தார். இதை பார்த்த செவிலியர் வனஜா உடனடியாக தான் வந்த காரை நிறுத்தி அருகில் சென்று இளைஞரை பரிசோதனை செய்தார். அப்போது அவர் நாடித் துடிப்பு நின்று ஆபத்தானநிலையில் இருந்ததை அறிந்து உடனடியாக அவருக்கு செவிலியர் வனஜா சி.பி.ஆர் என சொல்லப்படக்கூடிய இதயத்துடிப்பை மீண்டும் பழைய நிலைமைக்கு கொண்டுவரும் மார்பின் மீது அழுத்தி முதலுதவி சிகிச்சை அளித்தார்.

இதனால் அந்த மாணவர் வசந்த் உயிர் பிழைத்தார். விபத்தில் சிக்கி ஆபத்தான நிலையில் இருந்த இளைஞருக்கு சரியான நேரத்தில் முதலுதவி சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்றிய மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை செவிலியர் வனஜாவிற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். மன்னார்குடி நேசக்கரம் பொதுநல அமைப்பு சார்பில் செவிலியர் வனஜாவிற்கு நைடிங்கேள் புகைப்படம் வழங்கி பாராட்டினர். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன்,திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன், மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்டோர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு செவிலியர் வனாஜாவிற்கு தங்களது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.

Views: - 259

0

0