மூடப்படாத பாதாள சாக்கடைக்குள் தவறி விழுந்த நபர் பலி : அதிகாரிகளின் அலட்சியத்தால் உயிர் பறிபோன சோகம்!!

Author: Udayachandran RadhaKrishnan
31 January 2022, 1:02 pm
Unsealed Sewer - Updatenews360
Quick Share

திருப்பூர் : திறந்திருந்த பாதாள சாக்கடைக்குள் விழுந்து நபர் உயிரிழந்த நிலையில் உடனடியாக பாதாள சாக்கடை குழிகளை மூடவேண்டும், உயிரிழந்தவர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 18-வது வார்டு வி.கே.ஆர் நகர் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் நடைபெற்று வரக்கூடிய சூழ்நிலையில் அப்பகுதியில் பாதாள சாக்கடைக் குழிகள் திறக்கப்பட்டு மூடாமல் விடப்பட்டுள்ளது.

இதனை மூடி விட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்த நிலையில் மாநகராட்சி செவிசாய்க்காமல் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு அப்பகுதியில் நடந்து சென்ற நபர் ஒருவர் அங்கு பாதாள சாக்கடைக் குழி திறந்து இருப்பது தெரியாமல் பாதாள சாக்கடைக்குள் விழுந்துள்ளார்.

அதிகாலை அப்பகுதி பொதுமக்கள் பாதாள சாக்கடைக் குழிக்குள் ஒருவர் தலைகீழாக விழுந்து கிடப்பதை கண்டு உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர்.


சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பாதாள சாக்கடைக்குள் விழுந்து நபரை மீட்ட போது உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அப்பகுதியில் திறந்து இருக்கின்ற பாதாள சாக்கடையை மூட பலமுறை மாநகராட்சியிடம் வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்காததன் காரணமாக தற்போது உயிர் இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் இதற்கு பொறுப்பேற்று ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் உடனடியாக பாதாள சாக்கடை குழிகளை மூடவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Views: - 1481

0

0