விபத்தில் சிக்கி மயங்கிய இளைஞர்…முதலுதவி அளித்து காப்பாற்றிய போலீசார்: வைரலாகும் வீடியோ…குவியும் பாராட்டு..!!

Author: Rajesh
31 January 2022, 12:31 pm
Quick Share

சென்னை: அமைந்தகரை அருகே சாலை விபத்தில் காயமடைந்த இளைஞருக்கு உடனடியாக முதலுதவி அளித்து காப்பாற்றிய காவலர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

சென்னை அமைந்தகரை புல்லா அவென்யூ பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் நேற்று இரவு அமைந்தகரை காவல்நிலைய காவலர்கள் பிரேமா, சரவணன், சிவராமன், கோவிந்தன் ஆகியோர் பணியில் ஈடுபட்டிருந்தனர். முகக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வரும் நபர்களை நிறுத்தி வழக்குப் பதிவு செய்து அபராதம் விதித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது டிபி சத்திரம் பகுதியைச் சேர்ந்த பாபு என்பவர் அங்கு உள்ள சாலையை கடந்துள்ளார். அப்போது அதிவேகமாக சென்ற அடையாளம் தெரியாத இருசக்கர வாகனத்தில் வந்த சபர் பாபு மீது மோதிவிட்டு நிற்காமல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இதனை கண்ட காவலர்கள் உடனடியாக ஓடிச்சென்று மயக்க நிலையில் இருந்த பாபுவை மீட்டு சாலையோரம் தூக்கிச் சென்றனர். பாபு மூச்சுப் பேச்சு இல்லாமல் மயங்கிய நிலையில் இருந்ததால் காவலர் ஒருவர் பாபுவின் மார்பில் கையை வைத்து அமுக்கி முதலுதவி அளித்து பாபுவை முழிக்க வைத்து காப்பாற்றினார்.

இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், சற்றும் தாமதிக்காமல் முதலுதவி அளித்து காப்பாற்றிய காவலர்களுக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும் குவிந்து வருகிறது.

Views: - 1680

0

0