தலைநகரை தலைசுற்ற வைத்த போக்குவரத்து நெரிசல்… இன்ச் பை இன்ச்சாக நகரும் வாகனங்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
13 January 2024, 9:55 pm
traffic
Quick Share

தலைநகரை தலைசுற்ற வைத்த போக்குவரத்து நெரிசல்… இன்ச் பை இன்ச்சாக நகரும் வாகனங்கள்!!

பொங்கல் பண்டிகை நாளை மறுதினம் கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட சென்னையில் இருந்து ஏராளமான மக்கள் புறப்பட்டுள்ளனர். நேற்று முதல் சென்னையில் இருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகின்றனர்.

பொதுமக்கள் சிரமமின்றி சொந்த ஊர் செல்ல வசதியாக சென்னையில் இருந்து வழக்கமாக இயங்கும் 2,100 பஸ்களுடன் கூடுதலாக 4,706 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றனர். சென்னையில் கோயம்பேடு, கிளாம்பாக்கம், தாம்பரம், பூந்தமல்லி, 6 இடங்களில் இருந்து பஸ்கள் வெளிமாநிலங்களுக்கு புறப்பட்டு செல்கின்றன.

சென்னையில் இருந்து நேற்று ஒரே நாளில் 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வெளியேறிய நிலையில் இன்றும் மக்கள் கூட்டம் கூட்டமாக சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர். இதனால் சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் வாகனங்கள் நகர முடியால் நெரிசலில் சிக்கி உள்ளன.

தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்படுவது, குரோம்பேட்டை வர்த்தக இடங்களில் பொங்கல் பொருட்கள் வாங்க மக்கள் குவிந்து வருவதால் தற்போது கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது. இதனால் பல்லாவரத்தில் இருந்து தாம்பரம் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்று இன்ச் இன்சாக நகர்ந்து வருகின்றன.

அதேபோல் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து இயங்கும் பஸ்கள் தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சாலை வழியாக இரும்புலியூர் மேம்பாலத்தை கடக்கும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் பெருங்களத்தூரிலும் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

தாம்பரத்தில் இருந்து பெருங்களத்தூரை கடக்க சுமார் ஒருமணிநேரம் வரை நேரம் பிடிக்கிறது. மேலும் சென்னை நகரில் பல சாலைகளில் வழக்கத்தை விட இன்று வாகனங்கள் அதிகமாக செல்கின்றன. இதனால் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தற்போது தென்மாவட்டங்களுக்கான எஸ்இடிசி பஸ்கள் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது. இதனால் சென்னையின் பிற இடங்களில் இருந்து கிளாம்பாக்கத்துக்கு மக்கள் செல்ல மாநகர பஸ்களில் பயணிக்கின்றன. இந்த பஸ்களும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி உள்ளதால் கிளாம்பாக்கத்தில் உரிய நேரத்தில் பஸ்களை பிடிப்பதில் மக்கள் சிரமப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதோடு ஸ்ரீபெரும்புதூர் வழியாக சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணகிரி, ஓசூர், தர்மபுரி, வேலூர், ராணிப்பேட்டை மற்றும் அதனை சுற்றிய இடங்களுக்கு பஸ், கார்களில் மக்கள் அதிகமான பயணித்து வருகின்றனர். இதனால் ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடியில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. மேலும் மதுராந்தகம் அடுத்த ஆத்தூர் சுங்கச்சாவடியிலும் கூட்டம் அலைமோதுகிறது. இந்த சுங்கச்சாவடியில் கூடுதல் கவுண்ட்டர்கள் திறந்தாலும் கூட அதிகப்படியான வாகனங்கள் வருவதால் நிலைமையை சரிசெய்ய முடியவில்லை. இதனால் 2 கிலோமீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றனர். இந்த போக்குவரத்து நெரிசல் காரணமாக சென்னையில் இருந்து சொந்த ஊர் திரும்பும் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

Views: - 274

0

0