காதல் திருமணத்தால் குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி பாதையை அடைத்த கிராமம் : 10 ஆண்டுகளுக்கு பின் தம்பதிக்கு கிடைத்த நீதி!!

Author: Udayachandran RadhaKrishnan
25 August 2021, 6:29 pm
couples - Updatenews360
Quick Share

ராமநாதபுரம் : சாதி விட்டு சாதி காதல் திருமணம் செய்த ஒரு குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்த கிராமத்திற்கு வட்டாட்சியர் மூலமாக நீதி கிடைத்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் வாலாந்தரவை அருகேயுள்ள தெற்கூரை சேர்ந்த பரமேஸ்வரன், உமாவதி தம்பதிகள் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களாவர்.இதில் பரமேஸ்வரன் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்தர், உமாவதி வாலாந்தரவை பகுதியை சேர்ந்தவர்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு உமாவதி பொள்ளாச்சி பகுதிக்கு கூலி வேலைக்கு சென்ற போது பரமேஸ்வரனுக்கும் உமாவதிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இவர்களது காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது.

சாதி முக்கியமல்ல காதல்தான் முக்கியம் என முடிவெடுத்த காதலர்கள், திருமண பந்தத்தில் இணைந்தனர். பரமேஸ்வரன் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் உமாவதி வீட்டில் மட்டும் காதல் திருமணம் செய்தவர்களை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

ஆனால் வீட்டார் சம்மதித்தும், சாதி மறுப்பு திருமணத்தை ஏற்காத கிராமத்தினர், தம்பதியினரை தெற்கூர் பகுதியை சேர்ந்தவர்கள் ஊரைவிட்டு கடந்த 10 ஆண்டுகளாக ஒதுக்கி வைத்தனர். மேலும் கோயிலில் சாமி கும்பிடவோ, பொது குடிநீர் குழாய் தண்ணீர் பிடிக்கவும், ஊரில் நடக்கும் சுப துக்க நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவும் தடை செய்துள்ளனர்.

இதையடுத்து தற்போது ஊருக்கு ஒதுக்குப்புறமாக கடந்த 10 ஆண்டுகளாக வசித்து வந்த நிலையில், கடந்த மாதம் உமாவதியின் தாய் முத்துராக்கிற்கு சொந்தமான ஊருக்குள் உள்ள 36 சென்ட் நிலத்தை தனது மகள் உமாவதிக்கு கிரயமாக எழுதி கொடுத்துள்ளார்.

இதையடுத்து பரமேஸ்வரன், உமாவதி தம்பதியினர் வாங்கிய இடத்திற்கு குடியேற வாய்ப்புள்ளது என கருதிய தெற்கூர் பகுதியை சேர்ந்த ஊர் மக்கள், அந்த இடத்திற்கு செல்லும் பொது பாதையை கருவேல முள் செடிகளை கொண்டும், கம்பி வேலியை வைத்தும் அடைத்து இடத்திற்கு செல்ல விடாமல் தடுத்து பிரச்சனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

இதையடுத்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டதை அடுத்து ராமநாதபுரம் வட்டாட்சியர் ரவிச்சந்திரன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து இரு தரப்பையும் விசாரித்து பொதுப் பாதையை அகற்றினர்.

முள்வேலியை தற்போது அகற்றியுள்ளனர். இது தொடர்பாக இரு தரப்பையும் வட்டாட்சியர் அழைத்து சுமுகமாக பேசி சமரசம் செய்து வைத்தார் இதனால் 10 ஆண்டுகளாக நீடித்த பிரச்சனை முடிவுக்கு வந்தது

Views: - 323

0

0