பாசத்தை பிரித்த கொரோனா : இறந்த தாயின் உடலை பார்க்க போராடிய கொரோனா பாதித்த மகன்!!

14 September 2020, 11:47 am
Mother Dead Corona Son - updatenews360
Quick Share

திருப்பத்தூர் :வாணியம்பாடி அருகே உயிரிழந்த தாயின் உடலை பார்க்க மன்றாடிய கொரானாவால் பாதித்த மகன் பாதுகாப்பு உடை அணிந்து தாய்க்கு இறுதி அஞ்சலி செலுத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
 
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பாப்பாநேரி பகுதியை சேர்ந்தவர் மின்னல் (வயது 75). இவருக்கு  முருகேசன் திருப்பதி என்ற இரு மகன்கள் மூன்று மகள்கள் உள்ளனர். மூன்று மகள்களும் திருமணமாகி சென்று  விட்டனர்.

இளையமகன் திருப்பதி ஆந்திர மாநிலம் பணிக்காக சென்றுவிட்ட நிலையில் மூத்த மகன் முருகேசன் சுபா தனது தாய் தந்தையை பராமரித்து வந்துள்ளார். மேலும்  முருகேசனின் தாய் மின்னல் கடந்த 7 அண்டுகளாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார். 

இவரை அவருடைய மகன் முருகேசன் கவனித்து வந்தார். இந்நிலையில் முருகேசன்  கடந்த 3 நாட்களுக்கு முன்பு  கொரோனா தொற்றால்  பாதிக்கப்பட்டு வாணியம்பாடி தனியார் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிகச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் உடல் நலிவுற்ற தாய்  மின்னல் நேற்று உயிரிழந்தார். கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவரை சிகிச்சை காலம்  முடியும்  வரை  அனுப்புவதில்லை  இருப்பினும் தனது  தாய் இறந்த செய்தியை அறிந்த முருகேசன்  கடைசியாக தாய்க்கு  இறுதி அஞ்சலி செலுத்த அனுமதி  வேண்டும் என்று அங்குள்ள மருத்துவர்கள்  மற்றும் அதிகாரிகளிடம் மன்றாடி உள்ளார்.

இது குறித்து மாவட்ட  ஆட்சியர் சிவன்அருள் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர்  இரவு  10  மணிக்கு மாவட்ட  ஆட்சியர்  அனுமதியுடன் வருவாய் துறையினர் வாணியம்பாடி  வருவாய்  கோட்டாட்சியர் காயத்ரி சுப்ரமணி மற்றும் வட்டாட்சியர் சிவப்பிரகாசம் ஆகியோர் தலைமையில் முருகேசனுக்கு பாதுகாப்பு கவச உடை அணிவித்து நேற்றிரவு  11 மணிக்கு அவரது தாய்க்கு இறுதி அஞ்சலி செலுத்த அழைத்து சென்றனர்.

கொரோனா பாதுகாப்பு கவச உடை அணிந்து வந்து  தனது தாயின் உடலை பார்த்து கதறி அழுத முருகேசன் இறுதி அஞ்சலி செலுத்திய சம்பவம்  அப்பகுதியில் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும்  இறந்த முருகேசனின் தாயின் உடலை புதைக்க மயானம் இல்லாததாலும் தொடர்ந்து  அப்பகுதி  மக்கள் பலமுறை  மயானம் வேண்டி கோரிக்கை வைத்து வருவதாக  தெரிவித்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் தகவல் அறிந்து சென்ற வட்டாட்சியர் சிவப்பிரகாசம் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர் பழனிசெல்வம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று அப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அப்பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தினை ஒதுக்கி கொடுத்ததால் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்று உடலை அடக்கம் செய்தனர்.
 
தாய்க்கு இறுதி அஞ்சலி செலுத்த விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று அனுமதி அளித்து அழைத்து வந்து இறுதி அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்த மாவட்ட ஆட்சியர் மற்றும்  வருவாய்த் துறையினரை பொதுமக்கள்  பாராட்டி வருகின்றனர்.

Views: - 5

0

0