பெண் கவுன்சிலர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசிய ரவுடி… மருத்துவமனை செல்லும் போது போலீஸிடம் இருந்து எஸ்கேப்..!!

Author: Babu Lakshmanan
4 June 2022, 9:28 am
Quick Share

திருவள்ளூர் அருகே கொரோனோ மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்றபோது, வெடிகுண்டு வீசப்பட்ட வழக்கில் கைதான நபர் காவல்துறையின் வாsகனத்தில் இருந்து தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட நெற்குன்றம் கிராமத்தில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அப்பகுதியில் நடைபெறும் கஞ்சா புழக்கம் குறித்து தட்டிக்கேட்ட நாகராஜ் என்பவரை, அதே பகுதியைச் விக்கி என்கின்ற விக்னேஷ் கத்தியால் வெட்டினார். தற்போது அவர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுதொடர்பாக ஊர் மக்கள் சார்பில் ஊராட்சிமன்ற 1வது வார்டு உறுப்பினர் பாப்பாத்தி அம்மாள் என்பவரது மகன் பிரபு முன் நின்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த விக்னேஷ் கடந்த ஒன்றாம் தேதி என்று வார்டு உறுப்பினர் பாப்பாத்தி அம்மாளின் வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளான்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து சோழவரம் காவல்துறையினர் தலைமறைவான விக்னேஷை கைது செய்தனர். விசாரணைக்கு பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக முறைப்படி கொரோனோ பரிசோதனை செய்வதற்காக, பூதூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு காவல் துறைக்கு சொந்தமான வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளனர்.

அப்போது, உடன் வந்த விக்னேஷ் வாகனத்தில் இருந்து கீழே குதித்து அங்கிருந்து தப்பிச் சென்றான். இதனால் அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர், தப்பி ஓடியவரை தீவிரமாக தேடி வருகின்றனர். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் காவல்துறையினரின் வாகனத்திலிருந்து நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் கைது செய்யப்பட்டவர் தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 578

0

0