மேகதாது அணையை முற்றுகையிடும் போராட்டத்திற்கு தயாரான திருவாரூர் விவசாயிகள்… அணையைக் கட்டத் துடிக்கும் கர்நாடக காங்கிரசுக்கு கண்டனம்…

Author: kavin kumar
18 January 2022, 6:08 pm
Quick Share

திருவாரூர்: மேகதாது அணை முற்றுகை போராட்டத்தில் பங்கேற்க திருவாரூரில் இருந்து 100 விவசாயிகள் புறப்பட்டனர். மேகதாது அணை கட்ட வலியுறுத்தி கர்நாடக காங்கிரஸ் நடத்தும் பாதயாத்திரைக்கு தமிழக விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தை அழிக்கும் உள்நோக்கத்தோடு கர்நாடகாவில் அரசியல் லாப நோக்கத்தோடு ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு காங்கிரஸ் கட்சி மேகதாது துவங்கி பெங்களூர் நோக்கி கடந்த ஒரு வாரமாக பாதயாத்திரையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். கொரோனா பேரிடர் காலத்தில் பல்லாயிரக் கணக்கானவர்களை மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் சிவகுமார் தமிழகத்திற்கு எதிராக இப்பயணத்தை சட்டத்திற்கு புறம்பாக, உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் நோக்கோடும் சென்று கொண்டிருக்கிறார். இதை மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்த தயங்குகிறது. தமிழக அரசும் இதனை தட்டிக் கேட்பதற்கு முன்வரவேண்டும். தமிழக முதலமைச்சர் காங்கிரஸ் கட்சியின் போராட்டத்திற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும்.

காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு தன்னாட்சி அதிகாரத்தோடு செயல்படுவதை முடக்கும் உள்நோக்கத்தோடு பாஜக, காங்கிரஸ் கட்சியின் போராட்டத்தை ஆதரிக்கிறதோ என்கிற சந்தேகம் ஏற்பட்டு இருக்கிறது. கர்நாடகாவில் தமிழர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது. கர்நாடகம் தமிழகம் இடையே மீண்டும் கலவரத்தை உருவாக்குவதற்கு காங்கிரஸ் கட்சி முயற்சிக்கிறது. இதற்கு எதிராக தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் நாளை 19ம் தேதி மேகதாட்டு பகுதியை ஓசூர் வழியாக சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். முன்னதாக திருவாரூர் தேரடியிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பேரணியாக சென்று திருவாரூர் ரயில் நிலையத்திலிருந்து வாகனங்கள் மூலமாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட புறப்பட்டுச் சென்றனர்

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், விவசாயிகளின் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் நோக்கத்தோடு, உண்மைக்குப் புறம்பாக தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் அழகிரி பேசிவருகிறார். அவரது பேச்சு தமிழகத்தை அழிக்கும் நோக்கோடு மேகதாது அணை கட்ட கர்நாடக காங்கிரஸ் கட்சி நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கிறாரா என எண்ணத்தோன்றுகிறது. தமிழகத்தை அழித்துவிட்டு கர்நாடகாவில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற கர்நாடக காங்கிரஸ் கட்சி நடவடிக்கைக்கும், தமிழக விவசாயிகளையும் அழிப்பதற்கு காங்கிரஸ் கட்சித் தலைவர் அழகிரி துணை போகிறார் என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது. எனவே தமிழக விவசாயிகள் எந்த நிலையிலும் காவிரி உரிமையை விட்டுக் கொடுக்க மாட்டோம். காவிரியை மீட்கும் வரை ஓயமாட்டோம் என்கிற அடிப்படையிலேயே தான் இந்த போராட்டத்தை துவக்கி இருக்கிறோம் என தெரிவித்தனர்.

Views: - 335

0

0