நெல் ஜெயராமனின்‌ கண்டுபிடிப்புகளுக்கு அவர் பெயர் சூட்ட முதல்வர் நடவடிக்கை : அமைச்சர் காமராஜ் தகவல்.!!

7 August 2020, 7:17 pm
Minister Kamaraj - Updatenews360
Quick Share

திருவாரூர்‌ : வேளாண்மை பல்கலைக்கழகத்தில்‌ நெல்‌ ஜெயராமனின்‌ கண்டுபிடிப்புகளுக்கு அவர்‌ பெயர்‌ இடுவதற்கு உரிய நடவடிக்கையை முதலமைச்சர்‌ எடுத்து வருகிறார்‌ என உணவுத்துறை அமைச்சர்‌ காமராஜ்‌ தெரிவித்துள்ளார்.

திருவாரூர்‌ மாவட்டம்‌ திருத்துறைப்பூண்டி அருகே ஆதிரெங்கம்‌ கிராமத்தில்‌ நெல்‌ ஜெயராமன்‌ பாரம்பரிய நெல்‌ பாதுகாப்பு மையம்‌ சார்பில்‌ 14வது தேசிய நெல்‌ திருவிழா நடைபெற்றது. இந்த நிகழ்வில்‌ தமிழக உணவுத்துறை அமைச்சர்‌ காமராஜ்‌ கலந்து கொண்டு இயற்கை வேளாண்‌ விஞ்ஞானி நம்மாழ்வார்‌ மற்றும்‌ நெல்‌ ஜெயராமன்‌ புகழ்‌ குறித்து அமைச்சர்‌ காமராஜ்‌ பேசினார்‌.

பின்னர்‌ செய்தியாளர்களிடம்‌ பேசிய அமைச்சர்‌ காமராஜ்‌ கூறியதாவது, இயற்கை பாரம்பரியம்‌ மீட்டெடுக்க வேண்டும்‌ என்ற எண்ணத்தில்‌ 174 வகையான நெல்லை மீட்டெடுத்து விவசாயிகளுக்கு அடையாளமாக விளங்கியவர்‌ மறைந்த நெல்‌ ஜெயராமன்.‌ இந்நிலையில்‌ அரசு அவருடைய உழைப்பிற்கு தொடர்ந்து அங்கீகாரத்தை வழங்கி வருகிறது.

மேலும்‌ பாரம்பரிய நெல்லுக்கு உரிய மரியாதை இந்த அரசால்‌ தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. பாரம்பரிய நெல்லை எங்கு விளைவித்தாலும்‌ அரசு அதனை கொள்முதல்‌ செய்யும்‌ என முதல்வர்‌ உத்தரவிட்டுள்ளார்‌. அதுமட்டுமன்றி வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ ஜெயராமனின்‌ கண்டுபிடிப்புகளுக்கு எல்லாம்‌ அவர்‌ பெயர்‌ இடுவதற்கு உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருவதாக முதல்வர்‌ கூறியுள்ளார்‌ என அமைச்சர்‌ காமராஜ்‌ தெரிவித்தார்‌.