கடலில் மாயமான தூத்துக்குடி மீனவர்கள்: 48 மணி நேரத்திற்கு பின் உயிருடன் மீட்பு

21 July 2021, 11:31 pm
Quick Share

தூத்துக்குடி: நடுக்கடலில் தத்தளித்தக்கொண்டிருந்த மீனவர்களை இனிகோ நகர் மீனவர்கள் 48 மணி நேரத்தில் பத்திரமாக மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர்.

தூத்துக்குடி இனிகோ நகரை சேர்ந்தவர் பிரான்சிஸ். இவர், சக மீனவர்களான பெரியதாழையை சேர்ந்த ஜான்பால் மற்றும் தூத்துக்குடியைச் சேர்ந்த தமிழ் ஆகியோருடன் சேர்ந்து கடந்த 19-ம் தேதி அதிகாலை 1 மணிக்கு ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற நிலையில் நடுகடலில் படகு என்ஜின் பழுதானதால் கரை திரும்ப முடியாமல் தவித்து வந்துள்ளனர். இந்தநிலையில், மீனவர்கள் கரைதிரும்பாததால் பதற்றமடைந்த உறவினர்கள் இதுகுறித்து, மீன்வளத்துறை அதிகாரிகளுக்கும் மரைன் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். தீவிர தேடுதல் வேட்டை நடத்தியும் மரைன் போலீசாரால் மீனவர்களை கண்டுப்பிடிக்க முடியவில்லை எனத் தெரிகிறது.

இதைத்தொடர்ந்து, இனிகோ நகர் மீனவர்கள் சிலர் 6 படகுகளில் கடலில் மாயமான மீனவர்களை தேடி கடலுக்கு சென்றனர். இதன்பயனாக பலமணி நேர போராட்டத்துக்கு பின், நடுக்கடலில் தத்தளித்தக்கொண்டிருந்த பிரான்சிஸ் மற்றும் சக மீனவர்கள் ஜான் பால், தமிழ் ஆகியோரை பத்திரமாக மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர். இதுகுறித்து மீனவர் பிரான்சிஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், நடுக்கடலில் தத்தளிக்கும் சமயம் அவ்வழியாக வந்த மீனவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் எவ்வளவோ அபயக்குரல் எழுப்பியும் யாரும் எங்களை கண்டு கொள்ளவில்லை.

உதவிக்குக்கூட ஒருவரும் எங்களை திரும்பி பார்க்காதது வருத்தத்தை ஏற்படுத்தியது. 2 நாட்களாக பசி, பட்டினியுடன் கிடந்த நாங்கள் கடலில் நாதியற்று இறந்துவிடுவோமோ என்றே நினைத்திருந்தோம். இந்தநிலையில் தான், இனிகோ நகர் மீனவர்கள் எங்களை மீட்டுவந்தனர். அவசர காலத்தில் மீனவர்களுக்கு உதவவே அரசு உள்ளது. ஆனால் உதவிக்கு அரசு தரப்பிலிருந்து கூட உதவிட யாரும் முன்வராதது வருத்தமளிக்கிறது. இன்று எங்களுக்கு ஏற்பட்ட நிலைதான், நாளை மற்றொரு மீனவனுக்கும் ஏற்படும். எனவே, அவசரகாலத்தில் மீனவர்களுக்கு  உதவிட அரசு எந்நேரத்திலும் தயார்நிலையில் இருந்திட வேண்டும் என்றார்.

Views: - 66

0

0