பணம் வாங்கிட்டு பேசுகிறார் அண்ணாமலை… எங்க மண்ணில் கால் வைத்தால் தக்க பதிலடி கொடுப்போம்.. ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பு எச்சரிக்கை

Author: Babu Lakshmanan
2 June 2023, 4:27 pm
Quick Share

தூத்துக்குடி ; ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கழிவுகளை தமிழ்நாடு அரசு அகற்ற முடிவு செய்துள்ளதாகவும், பணிகளை மேற்கொள்ள துணை ஆட்சியர் தலைமையில் 9 பேர் கொண்ட குழு அமைத்துள்ளதாக ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 2018ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்த நிலையில், வன்முறை மற்றும் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

tuticorin sterlite protest - updatenews3360

இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலை மூடி ஐந்து ஆண்டுகளான நிலையில், ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று வேதாந்த நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், ஜிப்சம் உள்ளிட்ட கழிவுகளை அகற்றவும், பசுமை வளாகத்தை பராமரிக்கவும் அறிவுரை வழங்கப்பட்டது.

இது தொடர்பாக, தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் வேதாந்தா நிறுவனம் மனு மீதான விசாரணையை தள்ளி வைத்தது. இதை தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதிக்கக் கோரி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த இடையீட்டு மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு கடந்த மே 4ஆம் தேதி விசாரித்தது.

இதனிடையே, ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதிக்க கூடாது என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கழிவுகளை தமிழ்நாடு அரசு அகற்ற முடிவு செய்துள்ளது. பணிகளை மேற்கொள்ள துணை ஆட்சியர் தலைமையில் 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. கழிவுகளை அகற்றும் பணிகளுக்கான செலவை ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் ஏற்க உத்தரவிட்டுள்ளது. ஆலை கழிவுகளை அகற்றுபவர்கள் பக்கவாட்டில் உள்ள வாசலை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும், செயலற்ற இயந்திரங்களை அகற்ற, மூலப்பொருட்கள், உதிரிபாகங்களை ஆலைக்கு வெளியே கொண்டு செல்ல ஸ்டெர்லைட் நிர்வாகம் வைத்த கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இக்குழுவில், தூத்துக்குடி மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர், தொழில்துறை பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குனரக கூடுதல் இயக்குனர், மாசு கட்டுப்பாரி வாரியத்தின் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், தீயணைப்புத்துறை அதிகாரி, தூத்துக்குடி நகராட்சி செயற் பொறியாளர், ஓட்டப்பிடாரம் பஞ்சாயத்து வட்டார வளர்ச்சி அலுவலர், வேதாந்தா நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி ஒருவர் மற்றும் தொழில்நுட்ப அதிகாரி ஒருவர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- உச்ச நீதிமன்றம் ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் இருக்கின்ற ஜிப்சம் உள்ளிட்ட கழிவுகளை அகற்றவும், பசுமை வளாகத்தை பராமரிக்க கூறியிருக்கின்றனர். அதை செயல்படுத்துவதற்கு விரிவான அறிக்கை தயார் செய்து 9 பேர் கொண்ட குழு அமைத்திருக்கின்றோம். அதில் சார் ஆட்சியர் தலைமையில், தொழில்துறை பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குனரக கூடுதல் இயக்குனர், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், தீயணைப்புத்துறை அதிகாரி மற்றும் 9 பேர் கொண்ட குழு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கமிட்டி ஸ்டெர்லைட் ஆலையில் இருக்கின்ற கழிவுகளை அப்புறப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்வார்கள். மேலும், இந்த கழிவுகளை அகற்ற எவ்வளவு நாட்கள் தேவைப்படும். என்னென்ன மாதிரியான மெட்டீரியல்ஸ் தேவைப்படும், இந்த பணி மேற்கொள்ளப்படும் போது ஸ்டெர்லைட் இந்த கழிவுகள் அனைத்தும் அதற்கு உண்டான சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு லைவாக செய்து அங்கு கண்காணிக்கப்படும். மேலும், 24 மணி நேரம் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடக்கும். ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமையும் ஆட்சியரிடம் விரிவான ஆய்வறிக்கையை அளிப்பார்கள். இந்த கழிவுகளை உச்ச நீதிமன்றம் கூறியது போல கழிவுகளை எடுத்து அகற்றும் பணி நடைபெறும். இனிவரும் காலங்களில் உச்சநீதிமன்ற ஆணையை பின்பற்றும் நடவடிக்கை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும், என்றார்.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கழிவுகளை தமிழ்நாடு அரசு அகற்ற முடிவு செய்துள்ளது. இதனை முழுமையாக வரவேற்கின்றோம். மேலும், கூடுதலாக அருணா ஜெகதீசன் அறிக்கை வெளியிடப்பட்டு தாக்கல் செய்யப்பட்டு அது விவாதம் நடத்தப்பட்டு தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் பதில் உரை ஆற்றின பிறகும் இன்று வரை நடவடிக்கை எடுக்கவில்லை. குறிப்பாக, தமிழக முதலமைச்சர் சிறப்பு சட்டம் இயற்றப்பட்டு ஸ்டெர்லைட் ஆலையை அப்புறப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை நேரடியாக தமிழக முதல்வருக்கு நேரடியாக சந்திக்க அனுமதி வாங்கி தர வேண்டும் என்பதை மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தினோம். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் சிறப்பு சட்டத்தை உச்ச நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது. அது போல சிறப்பு சட்டம் ஆலையை அகற்ற ஏற்றப்பட வேண்டும் என்கிற கோரிக்கையை மையப்படுத்தி உள்ளோம்.

குறிப்பாக, பாஜக தலைவர் அண்ணாமலை தூத்துக்குடியில் நேற்று பேசும்போது, இந்தியா தாமிரத்தை இறக்குமதி செய்வதாக கூறி இருக்கிறார் பொய்யான தகவல் இது, ஹிந்துஸ்தான் நிறுவனம் நான்கு பிரிவுகளாக 2018 பின்பு விரிவாக்கம் செய்து உள்ளது. பிர்லா குரூப்ஸ் தாமிர உற்பத்தியில், 5 அரை லட்சம் உற்பத்தி நெருங்கிக் கொண்டிருக்கின்றன.

எந்த அடிப்படை உண்மைகளும் இல்லாமல் எந்த ஆதாரமும் இல்லாமல் அண்ணாமலை போன்றவர்கள் ஸ்டெர்லைட்டில் கையூற்றுப் பெற்றுக் கொண்டு இது போன்ற கருத்துக்களை பதிவு செய்தார்கள் என்று எண்ணம் உள்ளது. துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் இறந்து ஐந்து வருடம் ஆகிறது. பாரத பிரதமர் 15 உயிரிழப்புக்கு இதுவரை இரங்கல் தெரிவிக்கவில்லை. அண்ணாமலைக்கு மீண்டும் மீண்டும் சொல்லக் கூடியது. இது போன்ற கருத்துக்களை திணித்தால் இந்த மண்ணில் அடுத்த தடவை (அண்ணாமலை) கால் வைக்கும் போது தக்க பதிலடி எதிர்ப்பை கண்டிப்பாக செய்து காட்டுவோம்,என்றார்.

Views: - 133

0

0