பேனர் சரிந்து விழுந்து 3 பேர் உயிரிழந்ததன் எதிரொலி ; கோவை மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Author: Babu Lakshmanan
2 June 2023, 4:40 pm

கோவையில் அனுமதியின்றி விளம்பர பலகைகள் வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில் விளம்பர பலகை அமைக்கும் பணியின் போது ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து நில உரிமையாளர் மீதும், சம்பந்தப்பட்ட விளம்பர நிறுவனம் மீதும் கருமத்தம்பட்டி காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கோவை மாவட்டத்தில் அனுமதி இன்றி விளம்பர பலகைகள் அமைக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நில உரிமையாளர் மற்றும் விளம்பர நிறுவனத்தின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கோவை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :- கோவையில் உள்ள தேசிய நெடுஞ்சாலை சாலைகள், மாநில நெடுஞ்சாலை சாலைகள், மாநகராட்சி சாலைகள், உள்ளாட்சி அமைப்புக்கு சொந்தமான சாலைகள், நடைபாதைகள் ஆகிய இடங்களில் அனுமதி இன்றி அமைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகள், டிஜிட்டல் பேனர்கள், பிளக்ஸ் போர்டுகள், கொடிக்கம்பங்கள் ஆகியவற்றை அகற்றுவது தொடர்பாக அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அறிவுரை வழங்கப்பட்டு, அனுமதியற்ற விளம்பர பலகைகளை அகற்றுமாறு அறிவுறுத்தப்பட்டதில் கடந்த ஒரு மாதத்தில் சுமார் 185 விளம்பர பலகைகள் அகற்றப்பட்டுள்ளது.

விளம்பர பலகைகளை ஊராட்சி பகுதிகளில் அமைப்பதற்கு அரசு வழிமுறைகளின் படி மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பித்து உரிய அனுமதி பெறப்பட வேண்டும் எனவும் விளம்பர பலகைகளை பேரூராட்சி நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் அமைப்பதற்கு சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடமிருந்தும் காவல்துறையினர் பரிந்துரையின்படியும் அனுமதி பெற்று இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளை உள்ளாட்சி அமைப்பினர் மற்றும் காவல் துறையினர் இணைந்து அகற்றுவதற்கு தனிக்குழு அமைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அதன்படி குறிப்பாக தெக்கலூர்- நீலம்பூர் நெடுஞ்சாலையில் உள்ள அனுமதியற்ற விளம்பர பலகைகளை உடனடியாக அகற்ற காவல்துறையினர் மற்றும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பினர் மூலம் துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கோவை மாவட்டத்தில் அனுமதி இன்றி விளம்பர பலகைகள் அமைக்கப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நிலத்தின் உரிமையாளர் மற்றும் விளம்பர நிறுவனத்தின் மீது தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

  • producers not accept to produce ajith kumar 64th movie அஜித்குமாரின் கண்டிஷனை கேட்டு தெறித்து ஓடும் தயாரிப்பாளர்கள்? அப்படி என்னதான் சொல்றாரு!