கனமழையால் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட தற்காலிக சாலை… பல கிராமங்களின் தொடர்பு துண்டிப்பு ; பொதுமக்கள் அவதி…!!

Author: Babu Lakshmanan
9 November 2023, 12:12 pm

கடும் மழையின் காரணமாக தூத்துக்குடி அருகே உள்ள செக்காரக்குடி கிராமத்தில் தற்காலிக சாலை தண்ணீரில் அடித்து செல்லப்பட்டதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்றைய தினம் 7.4 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக ஒட்டப்பிடாரத்தில் 80 மில்லி மீட்டர் கனமழை பெய்துள்ளது.

இந்த நிலையில், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொட்டலூரணி-செக்காரக்குடி இடையே உள்ள சாலையில் தமிழக அரசு 3 கோடி ரூபாய் செலவில் பாலம் அமைக்கும் பணியானது நடைபெற்று வருகிறது.

இந்த பாலம் அமைக்கும் பணி நடைபெறுவதால் மாற்றுப்பாதை (தற்காலிக பாலம்) வழியாக பொதுமக்கள் சென்று வந்தனர். தற்போது இந்த மாற்று பாதை மேல் மழைநீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடிய நிலையில், தற்காலிக பாலம் மழை நீரில் அடித்து செல்லப்பட்டது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து முற்றிலுமாக தடைப்பட்டுள்ளது.

மேலும், இந்த வழியாக, கீழசெக்காரக்குடி, மேல செக்காரக்குடி, ஆலந்தா கிராமம், சிங்கத்தாக்குறிச்சி, மீனாட்சிபுரம், மணியாச்சி தட்டப்பாறை ஆகிய ஊர்களுக்கு செல்லக்கூடிய பொதுமக்கள் வாகனங்களிலோ, நடந்தோ அந்த பகுதியை கடந்து செல்ல முடியாது என்பதால், அங்குள்ள பொது மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

மேலும், இதன் காரணமாக செக்காரக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் 3 தொடக்கப் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

  • actress kayadu lohar increased his salary double இதுதான் சரியான தருணம்-சமயம் பார்த்து உஷாராக சம்பளத்தை ஏற்றிய கயாது லோஹர்!