தூத்துக்குடி அனல்மின்நிலையத்திற்கு 4,000 டன் நிலக்கரி வருகை : மின்உற்பத்தி செய்யப்படும் யூனிட்டுகளின் எண்ணிக்கை 2ஆக உயர்வு

Author: Babu Lakshmanan
9 April 2022, 9:17 am
Quick Share

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக 4 யூனிட்டுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது 4,000 டன் நிலக்கரி கொண்டு வரப்பட்டுள்ளது.

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட 5 யூனிட்டுகள் மூலம் தினமும் சுமார் 1,050 மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மொத்த உள்ள 5 யூனிட்டுகளில் கடந்த சில தினங்களுக்கு முன் 3, 4-வது யூனிட்டுகளில் மின் உற்பத்தி திடீரென நிறுத்தப்பட்டன. 1, 2, 5 ஆகிய யூனிட்டுகளில் மட்டும் மின்சாரம் உற்பத்தி நடைபெற்று வந்தது.

இந்நிலையில், நேற்று அனல் மின் நிலையத்தில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக 2, 3, 4 மற்றும் 5வது யூனிட்டுகள் என மொத்தம் 4 யூனிட்டுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. 1வது யூனிட்டில் மட்டும் 210 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

இதனால் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் நாள் ஒன்றுக்கு 1050 மெகாவாட் உற்பத்தி செய்ய வேண்டிய இடத்தில் 210 மெகா வாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இதனால் 840 மெகா வாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

தொடர்ந்து நிலக்கரி வந்தால் மட்டுமே இந்த நான்கு யூனிட்டுகள் மீண்டும் செயல்படும் என்ற சூழ்நிலை உருவானது. கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் தொடர்ந்து மின்வெட்டு ஏற்படும் அபாயம் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் கலக்கத்தில் இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில், தூத்துக்குடி அனல்மின் நிலையத்திற்கு 4,000 டன் நிலக்கரி கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்மூலம், நிறுத்திவைக்கப்பட்ட யூனிட்டுகளில் ஒன்றில் மட்டும் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியுள்ளது. இதனால், மின்உற்பத்தி செய்யப்படும் யூனிட்டுகளின் எண்ணிக்கை 2ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

Views: - 751

0

0