கனமழையால் ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் பாதிப்பு : தமிழக அரசுக்கு விவசாயிகள் கண்ணீர் கோரிக்கை!!!

Author: Udayachandran RadhaKrishnan
18 October 2021, 1:58 pm
Samba Paddy -Updatenews360
Quick Share

மயிலாடுதுறை : கனமழையால் தண்ணீர் தேங்கி ஆயிரம் ஏக்கரில் சம்பா பயிர்கள் பாதிப்படைந்ததால் உடனடியாக வடிகால் வாய்க்கால்களை தூர்வார விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை தாலுக்கா ஆனந்ததாணடவபுரம் அருகே உள்ள 26 சேத்தூர், மேலாநல்லூர் கிராமங்களில் ஆண்டுதோறும் 3,000 ஏக்கரில் சம்பா சாகுபடி நடைபெறுவது வழக்கம்.

நிகழாண்டு ஆயிரம் ஏக்கருக்குமேல் முதல்கட்டமாக சம்பா பயிர்களை விவசாயிகள் நடவு செய்துள்ளனர். மீதமுள்ள இரண்டாயிரம் ஏக்கரில் நடவு பணிகளுக்காக பாய் நாற்றங்கால் தயார் செய்யப்பட்டும் நடவு செய்ய விவசாய நிலங்களை தயார்ப்படுத்தியும் வைத்திருந்தனர்.

இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக பெய்த கன மழையால் நடவு செய்யப்பட்ட 10நாள் சம்பா பயிர்கள் அனைத்தும் தண்ணீர் வடிய வழியின்றி நீரில் மூழ்கியுள்ளது. 5 கிலோமீட்டர் தூரம் செல்லும் சேத்தூர் வாய்க்கால், மற்றும் மேலாநல்லூர் வாய்க்கால், ஏரி வாய்க்கால், தெற்கு வாய்க்கால் என அப்பகுதியல் உள்ள நான்கு வடிகால் வாய்க்கால்களும் முறையாக தூர்வாரப்படாததால் நிலத்தில் உள்ள தண்ணீரை வடிய வைக்க முடியவில்லை என்று விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதனால் தண்ணீரில் மூழ்கியுள்ள பயிர்கள் மற்றும் நடவு செய்வதற்காக தயார் செய்யப்பட்டுள்ள பாய் நாற்றங்கால் அழுக தொடங்கியதால் வேதனையடைந்த விவசாயிகள் வடிய வழியின்றி தேங்கியுள்ள தண்ணீரை பயிர் செய்யாத வயல்களில் பாய்ச்சி வருகின்றனர். இதனால் விவசாயிகளுக்கு கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது.

மேலும் நடவு பணிகளை துவங்க முடியவில்லை என்றும் இதே நிலை நீடித்தால் வரும் வடகிழக்கு பருவமழை காலத்தில் சம்பா பயிர்களை காக்க முடியாது எனக்கூறும் விவசாயிகள் உடனடியாக தமிழக அரசு மாவட்ட நிர்வாகம் மூலம் இப்பகுதியில் உள்ள 4 வாய்க்கால்களையும் தூர்வாரி தண்ணீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Views: - 487

0

0