பொது இடங்களில் மது அருந்தி பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் : 20க்கும் மேற்பட்டவர்கள் கைது !!

Author: kavin kumar
27 February 2022, 1:29 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுத்தும் வகையில், பொது இடங்களில் மது அருந்தி கொண்டிருந்த 20 க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். மேலும் மதுபான பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

சுற்றுலா நகரமான புதுச்சேரிக்கு வெளிமாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக புதுச்சேரி கடற்கரை பகுதிகளில் மாலை நேரங்களில் அதிகளவு சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் நடை பயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் கடற்கரை பகுதிகள் மற்றும் பொது இடங்களில் இரவு நேரங்களில் ஒருசிலர் மது அருந்திவிட்டு பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடம் தகராறில் ஈடுபடுவதாக காவல்துறைக்கு தொடர்ச்சியாக புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.

இதனையடுத்து இன்று இரவு காவல் கண்காணிப்பாளர் தீபிகா தலைமையில், ஒதியன்சாலை மற்றும் உருளையன்பேட்டை காவல்நிலைய போலீசார் கடற்கரை பகுதிகள் மற்றும் பொது இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது பொது இடங்களில் மது அருந்திகொண்டிருந்த 20 க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். மேலும் இருசக்கர வாகனங்களில் கொண்டு சென்ற மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். இதனிடையே பொது இடங்களில் மது அருந்துவோர் யாராக இருப்பினும் கைது செய்யப்படுவார்கள் எனவும் போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.

Views: - 799

0

0