எங்களுக்கு மட்டும் பாரபட்சம்.. திட்டம் தொடங்கி மூன்று மாதமாச்சு : தமிழக அரசை கண்டித்து மொட்டை அடிக்கும் தொழிலாளர்கள் போராட்டம்!!

Author: Udayachandran RadhaKrishnan
5 November 2021, 12:44 pm
Palani Protest -Updatenews360
Quick Share

திண்டுக்கல் : பழனி கோவிலில் மாதம்தோறும் வழங்கவேண்டிய 5ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகையை வழங்காததை கண்டித்து பழனி கோவில் மொட்டை அடிக்கும் தொழிலாளர்கள் பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பணிபுரியும் மொட்டைஅடிக்கும் தொழிலாளர்களுக்கு மாதம்தோறும்‌ ஊக்கத்தொகையாக 5 ஆயிரம்ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அறிவித்தது.

இதன்படி பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் பணிபுரியும்‌ மொட்டை அடிக்கும் தொழிலாளர்களுக்கும் ஊக்கத்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் இதுவரை ஒருமுறை கூட ஊக்கத்தொகை வழங்கவில்லை என தெரியவந்துள்ளது.

ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சியை தமிழக முதலமலச்சர் ஸ்டாலின் சென்னையில் துவக்கிவைத்த நிலையில் பழனி கோவிலில் மொட்டையடிக்கும் தொழிலாளர்கள் 330 பேருக்கும் இதுவரை ஊக்கத்தொகை வழங்கப்படாததால் பழனி கோவில் மொட்டை அடிக்கும் தொழிலாளர்கள் பேட்ஜ் அணிந்தபடி பணிபுரிந்து தங்களது எதிர்ப்புகளையும், கண்டனங்களையும் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் தெரிவித்ததாவது:- கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாகவே தற்காலிக ஊழியராக பணியாற்றி வரும் தங்களுக்கு மொட்டையடிக்கும் பக்தர்களிடம் கோவில் நிர்வாகம் வசூலிக்கும் கட்டணத்திலிருந்து பங்குத் தொகை வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் கோவில்களில் கட்டணமில்லாமல் மொட்டை அடிக்கப்படும் என அறிவித்ததை தொடர்ந்து, தங்களுக்கு மாதம்தோறும் 5ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும், அத்துடன் திருக்கோவில் நிர்வாகம் சார்பில் ஊதியமும் வழங்கப்படும் என்று தெரிவித்தது.

ஆனால் கொரோனா காரணமாக பக்தர்களுக்கு அனுமதிமில்லாததால் ஊதியம் இல்லாமல் சிரமப்பட்டு வந்த தங்களுக்கு அரசு அறிவித்த ஊக்கத்தொகை தங்களுக்கு உதவும் என்று எதிர்பார்த்த நிலையில் 3மாதங்களாகியும் ஒருமுறை கூட ஊக்கத்தொகை வழங்கவில்லை.
இதுகுறித்து கோவில் நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும், அரசு உத்தரவு வரவில்லை என்று பதிலளிக்கின்றனர். இந்நிலையில் 50 ஆண்டுகளுக்கு மேலாக வழங்கப்பட்டு வந்த தீபாவளி போனஸ்சும் இந்த ஆண்டு நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் தங்களுக்கு குடும்பம் மற்றும் குழந்தைகளுக்கு தீபாவளிக்கு புத்தாடை கூட எடுக்க முடியாத அளவு வறுமையில் உள்ளதாக கவலை தெரிவித்தனர். எனவே தமிழக அரசையும், திருக்கோவில் நிர்வாகத்தையும் நம்பி இருந்த 330மொட்டை அடிக்கும் தொழிலாளர்கள் அனைவரும் தங்களது கண்டனத்தையும், கோரிக்கைகளையும் வலியுறுத்தி பேட்ஜ் அணிந்து பணி புரிந்து வருவதாக தெரிவித்தனர்.

இதில் 30ரூபாய் கட்டணத்தை 70ரூபாயாக உயர்த்தி கொடுக்க வேண்டும், மாதம்தோறும் ஊக்கத் தொகை 5,000 அறிவித்திருந்த நிலையில் அதை 10,000 ரூபாயாக உயர்த்தி கொடுக்க வேண்டும், தற்காலிக பணியாளராக பணியாற்றி வருபவர்களை நிரந்தர பணியாளர்களாக மாற்றம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Views: - 291

0

0