கால்நடைகளை வேட்டையாடிய புலி : வனத்துறை வைத்த கூண்டில் அகப்பட்டது!!

26 October 2020, 12:14 pm
Tiger- Updatenews360
Quick Share

நீலகிரி : நீலகிரி கேரள எல்லையான வயநாடு மாவட்டத்தில் கிராமப்பகுதியில் கால்நடைகளை தாக்கி கொன்று சாப்பிட்டு வந்த பெண் புலி வனத்துறை வைத்த கூண்டில் சிக்கியது.

நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா ஒட்டிய எல்லைப்பகுதி கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் உள்ள சுல்தான் பத்தேரி தாலுக்கா.

இங்குள்ள சியம்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள அம்பத்தாறு, மூனானக் குழி, இருளாம், காலடி ஜங்ஷன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக புலி ஒன்று நடமாடி வந்துள்ளது. கிராம மக்களின் வளர்ப்புப் பிராணிகளான ஆடு மாடுகளை கொன்று சாப்பிட்டு வந்துள்ளது.

இந்த புலியினை பிடித்து கொண்டு செல்ல வேண்டும் என வனத்துறைக்கு அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து வனத்துறையால் புலி நடமாட்டம் உள்ள பகுதியில் கூண்டு வைத்து கண்காணிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் நேற்று மாலை புலி கூண்டில் சிக்கியிருப்பதை வனத்துறையினர் பார்த்துள்ளனர். இதனையடுத்தே கூண்டுடன் அங்கிருந்து புலியை முத்தங்கா சரணாலய பகுதிக்கு கொண்டு சென்று பாதுகாப்பாக வைத்து உள்ளனர்.

புலியை அடர் வனப்பகுதிக்குள் விடுவதா அல்லது மிருக காட்சி சாலைக்கு கொண்டு செல்வது என்பது குறித்து தேசிய புலிகள் ஆணையத்திடம் கிடைக்கும் தகவலின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்பது வயதான இந்த பெண் புலியால் வயது முதிர்வு காரணமாக வனப்பகுதியில் வேட்டையாட முடியாத நிலையில் கிராம பகுதிகளுக்கு வந்து ஆடு மாடுகளை சாப்பிட்டு வந்துள்ளதாகவும், இவ்வாறு மக்கள் வசிக்கும் பகுதியில் புலி நடமாடுவது மனிதர்களை தாக்கும் ஆபத்து உள்ளதாகவும் இதனை வனப்பகுதியில் விட்டால் மீண்டும் கிராமப் பகுதிகளுக்குள் செல்ல வாய்ப்பு உள்ளதால் மிருகக்காட்சிசாலையில் கொண்டு சென்று பராமரிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Views: - 24

0

0