திராவிட இயக்கம் இருந்தால் தான் தமிழகம் முன்னேற முடியும் : அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சு!!

22 August 2020, 7:14 pm
Minister Sellur Raju- Updatenews360
Quick Share

மதுரை : திராவிட இயக்கம் இருந்தால் தான் தமிழகம் முன்னேற முடியும், தமிழனின் பெருமை தெரிய வேண்டுமென்றால் திராவிட இயக்கங்கள் இருக்க வேண்டும் என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

மதுரை சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக சார்பில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் உறுப்பினர் சேர்க்கைக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா, வேடசந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பரமசிவம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் 500 க்கும் மேற்பட்ட கட்சியினர் கலந்துகொண்டதால் சமூக இடைவெளி கேள்விக்குறியானது. மேலும் பலர் முகக்கவசம் அணியாமலும் இருந்ததால் அரசின் விதிமுறைகள் கேள்விக்குறியானது.

அதனைத்தொடர்ந்து கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மேடையில் பேசுகையில், ஜெயலலிதா உடல் தான் மறைந்துள்ளது. ஆனால் அவர் தற்போதும் வாழ்ந்து கொண்டுள்ளார். மக்கள் நல திட்டங்களாக, அதிமுக தொண்டர்களாக வாழ்ந்து கொண்டுள்ளார்.

தேர்தலை சந்திக்க அதிமுக தொண்டர்கள் தயாராகி விட்டார்கள். 2016 ம் ஆண்டு தனிப்பெரும் வெற்றியை பெற்ற இயக்கம் அதிமுக. தனித்து நின்று கூட்டணியே இல்லாமல் வெற்றி பெற்ற இயக்கம் அதிமுக. அந்த வெற்றியை ஈட்டிய தலைவர் ஜெயலலிதா. சேலை கட்டிய சிங்கம் ஜெயலலிதா. நிச்சயமாக 2021 ல் மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்கும்.

அதிமுக ஆளும் கட்சியாக இருப்பதற்கு இளைஞர் கூட்டமே காரணம். இரத்தத்தை வியர்வையாக சிந்தி வளர்ந்த இயக்கம் அதிமுக. எம்ஜிஆர் தொடங்கிய இயக்கத்தை எவராலும் அழிக்க முடியாது. ஒரு முதல்வர் நூறாண்டு செய்ய வேண்டிய சாதனையை நான்கே ஆண்டுகளில் செய்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

நாங்கள் எத்தனை நாள் இருக்கப்போகிறோம் எனத் தெரியவில்லை. எங்களைப்பற்றி நாங்கள் ஒருபோதும் கவலைப்படவில்லை. ஆனால் இளைய சமுதாயத்தின் எதிர்காலத்திற்கும், மதுரையின் எதிர்கால குடிநீர் பிரச்சனைக்கும் தீர்வு கண்டுள்ளோம்.

நான்கு படங்கள் ஓடிவிட்டால் முதல்வர் எனச்சொல்லிக் கொள்கின்றனர். எத்தனையோ நடிகர்கள் தங்களை முதலமைச்சர் எனக்கூறிக்கொண்டு உள்ளனர். ஆனால் எம்ஜிஆரை மக்கள் கட்சி ஆரம்பிக்க சொன்னார்கள். தன் தலைவரின் உருவத்தையும் பெயரையும் கட்சிக்கு வைத்த ஒரே அரசியல் தலைவர் எம்ஜிஆர்.

திராவிட இயக்கம் இருந்தால் தான் தமிழகம் முன்னேற முடியும். தமிழனின் பெருமை தெரிய வேண்டுமென்றால் திராவிட இயக்கங்கள் இருக்க வேண்டும். தமிழக மக்கள் மிக மிக சிறந்தவர்கள். தமிழக மக்களின் சிந்தனையும் எண்ணமுமே அரசியலில் எதிரொலிக்கும்.

எம்ஜிஆர் மருத்துவமனையில் இருந்தபோது, தமிழகத்தில் தலைவர் இல்லாமல் வெற்றி பெற்ற ஒரே கட்சி அதிமுக. அதே போல ஜெயலலிதாவும் தற்போது இல்லை. ஆனால் நாம் நிச்சயமாக நல்ல ஆட்சியை வழங்குவதன் மூலம் வெற்றி பெறுவோம். கோலிமூட்டி இந்த இயக்கத்தை சிதைத்து விடலாம், அழித்துவிடலாம் என நினைக்கிறார்கள்.

கிளைச்செயலாளர் கூட துணை முதல்வராகும் வாய்ப்பு அதிமுகவில் உள்ளது. திமுகவில் அதுபோல கிடையாது.
ஸ்டாலின் மகனோ மகளோ கட்சிக்குள் வர மாட்டார்கள் எனக்கூறிவிட்டு தற்போது கட்சிக்குள்ளேயே மிகப்பெரிய பூசல் உள்ளது. திமுகவுக்கு பலகோடி ரூபாய் சம்பளம் கொடுத்து ஆலோசனை சொல்ல ஆள் உள்ளது. ஆனால் அதிமுகவுக்கு மக்கள் ஆலோசனை சொல்லுவார்கள் என பேசினார்.

Views: - 38

0

0