வனத்துறையில் காலி பணியிடங்களுக்கு TNPSC மூலம் தேர்வு.. அமைச்சரின் அசத்தல் அறிவிப்பு : மாணவர்களே ரெடியா?

Author: Udayachandran RadhaKrishnan
22 July 2024, 4:40 pm

நெல்லை மாவட்ட வன அலுவலகத்தில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் தலைமையில் வனத்துறை அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து அமைச்சர் மதிவேந்தன் நிருபர்களிடம் கூறியதாவது:-வனத்துறையில் பணியாளர் பற்றாக்குறையை போக்கும் வகையில் டி.என்.பி.எஸ்.சி. மூலம் புதிய பணியாளர்கள் நியமிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

யானைகளை கண்காணிக்க, பாதுகாக்க வேட்டை தடுப்பு காவலர்கள் உட்பட பலர் இருக்கிறார்கள். இதற்காக கூடுதல் நிதியும் முதல்-அமைச்சர் ஒதுக்கி இருக்கிறார்.இதற்காக தனியாக குழு அமைக்க முடியாது. காட்டுப் பன்றிகளை வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்குவது குறித்து ஏற்கனவே சட்டமன்றத்தில் பேசி இருக்கிறேன்.

அரசாணை விரைவில் வெளியிடப்படும். அதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது.மாஞ்சோலை விவகாரத்தில் நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. ஆகையால் அதைப் பற்றி பேச முடியாது. வனத்துறை சார்பில் நீதிமன்றத்தில் நிலை அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

மணிமுத்தாறு பகுதியில் அமைய இருந்த பல்லுயிர் பூங்கா நெல்லை மாவட்டத்தில் இருந்து கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மாற்றப்பட்ட விவகாரம் குறித்து வனத்துறை அதிகாரிகளுடன் பேசி இது தொடர்பாக பதில் அளிக்கிறேன். இடம் தொடர்பாக ஏதேனும் பிரச்சினை இருக்கலாம்.

அதனால் மாற்றப்பட்டு இருக்கலாம்.மாஞ்சோலை சூழல் சுற்றுலாவை மேம்படுத்துவது குறித்து கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வாய்ப்பு உள்ளதா என்பதை பரிசீலனை செய்து வருகிறோம்.வனத்தையும் பாதுகாக்க வேண்டும்.

வன விலங்குகளையும் பாதுகாக்க வேண்டும். மக்களும் முக்கியம். இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.வனப்பகுதியில் குற்றங்களை குறைக்க தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.தென்காசி மாவட்டத்தை பிரித்து 5 ஆண்டுகள் ஆன நிலையில் தனி மாவட்ட வன அலுவலர் நியமிக்கும் பணி பரிசீலனையில் உள்ளது. விரைவில் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறினார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!