திருநங்கைகள்தான்… தீண்டத்தகாதவர்கள் அல்ல!!

8 September 2020, 4:18 pm
Transgender - updatenews360
Quick Share

திருநங்கைகளைத் தீண்டத்தகாதவர்களாய் பார்க்கும் மக்கள் திருநங்கைகள் பற்றி தொடர்ந்து சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டாலும் அரசு பல சலுகைகளை வழங்கிவந்தாலும் மக்கள் அவர்களைத் தீண்டத்தகாதவர்களாய்ப் பார்க்கும் அவலம் தொடர்கிறது.

செய்யூரில் திருநங்கைகளுக்கு வீட்டுமனைப்பட்டா ஒதுக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராடியது ஊருக்கு நடுவில் அவர்கள் வாழக்கூடாது என்று ஒதுக்கிவைக்கும் மனநிலையையே காட்டுகிறது.

“தாய்ப்பெண்ணோ முல்லைப்பூ
தனிமலடி தாழம்பூ
வாய்ப்பந்தல் போடுகின்ற நாங்கள்
காகிதப் பூக்கள்”

என்று மூன்றாம் பாலினத்தவரை காகிதப்பூக்களுடன் ஒப்பிட்டு கவிஞர் நா. காமராசன் பாடினார். 1970-களின் தொடக்கத்தில் அவர்களில் அவலத்தை கவிஞர் பாடியதற்கும் இன்றைய நிலைக்கும் சற்று வேறுபாடு காணப்பட்டாலும் மூன்றாம் பாலினத்தவர் குறித்த பொதுமக்களின் பார்வை மாறாத நிலையே காணப்படுகிறது.

திருநங்கையரை மூன்றாம் பாலினத்தவராக தமிழக அரசு அங்கீகரித்து அவர்கள் சமுதாயத்தில் அனைவரோடும் சமமாக வாழ பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. திருநங்கையர்களின் சமூக பாதுகாப்பு கருதியும், அவர்களின் சிறப்பை வலியுறுத்தும் வகையில் 2008 ஆம் ஆண்டு தமிழக அரசு திருநங்கையர்களுக்கு தனி நலவாரியம் அமைத்தது. இந்த நலவாரியம் அமைக்கப்பட்ட அந்த நாளை திருநங்கையர் தினமாக ஒவ்வொரு வருடமும் கொண்டாட தமிழக அரசு, மார்ச் 1, 2011 அன்று அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திருநங்கைகளை 2015ஆம் ஆண்டில் ஜெ.ஜெயலலிதா தலைமையிலான அரசு மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் சேர்த்துள்ளது. இந்தியாவில் இவர்களுக்கான சமுதாய மதிப்பு கல்வி பெருவதிலும் வேலைவாய்ப்பை வழங்குவதிலும் இருக்கிறது என்று கருதிய அரசு வேலை வழங்கி வருகிறது. இவர்கள் குடியிருக்க பலரும் வீடு வாடகைக்குத தர முன்வராத சூழலில் மாநில அரசு மூன்றாம் பாலினத்தவருக்கு வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கி வருகிறது.

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தாலுகாவுக்குட்பட்ட புத்திரன் கோட்டை கிராமத்தில் அரசுக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலையில் அந்த நிலத்தில் கடந்த 2018-ம் ஆண்டு திருநங்கைகள் 51 பேருக்கு அரசு சார்பில் வீட்டுமனை பட்டா வழங்குவது என காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் மூலமாக அறிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, திருநங்கைகளுக்கு நிலம் ஒதுக்கப்பட்ட இடத்தில் அதிகாரிகள் நிலத்தை அளக்க சென்றதாக கூறப்படுகிறது. அப்போது, கிராம மக்கள் அங்கு திரண்டு வந்து, தங்களுக்கு எந்த ஒரு அறிவிப்பும் இன்றி அந்த இடத்தில் நில அளவீடு செய்வதை கண்டித்து வருவாய்த்துறை மற்றும் போலீசாரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும், அப்பகுதியில் நீண்ட நாட்கள் வசிக்கும் தங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க மாவட்ட கலெக்டர், தாசில்தார், ஆர்.டி.ஓ. உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு பலமுறை மனு கொடுத்தும் அதன் மீது நடவடிக்கை எடுக்காத நிலையில், வருவாய்த்துறையினர் மூன்றாம் பாலினத்தவருக்கு பட்டா நிலம் ஒதுக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருநங்கைகளுக்கு வீட்டுமனை பட்டா ஒதுக்கக்கூடாது எனவும் தெரிவித்தனர்.

இது தொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்குமாறு வருவாய்த்துறை அதிகாரிகள் அவர்களிடம் கூறி சமாதானப்படுத்தினர். நேற்று 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்து கலெக்டர் ஜான் லூயிசை நேரில் சந்தித்து மனு ஒன்றையும் அளித்தனர்.

திருநங்கைகளுக்கு ஒதுக்கப்பட்ட இடம் கிராம மக்களின் பயன்பாட்டில் உள்ளது என்று கூறிய அவர்கள் வீட்டுமனை பட்டா இல்லாமல் இருக்கும் ஏனைய கிராம மக்களுக்கு அந்த நிலத்தைக் கொடுப்பதில் தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றும் கூறினர். கிராமத்தில் மக்கள் வாழும் பகுதியில் மூன்றாம் பாலினத்தவருக்கு பட்டா வழங்கப்பட்டதே எதிர்ப்புக்குக் காரணம் என்று தெளிவாகத் தெரிகிறது.

கிராம மக்களின் கடும் எதிர்ப்பை மீறி மூன்றாம் பாலினத்தவர்க்கு பட்டா வழங்க முடியுமா என்ற சிக்கல் அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், அவ்வாறு பட்டா தரப்பட்டால் அப்பகுதியில் மூன்றாம் பாலினத்தரால் வீடுகட்டி வாழ முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அரசு எந்த விதமான நடவடிக்கை எடுத்தாலும் மக்கள் மனம் மாறாவிட்டால் மூன்றாம் பாலினத்தவர் அனைவரோடும் சரிசமமாக வாழ முடியாத நிலையே இருக்கிறது.

“தலைமீது பூவைப்போம்
தாரணியோர் கல்லறையில்
பூவைத்தல் முறைதானே?
பூத்தஉயிர்க் கல்லறைகள் நாங்கள்”

என்று மூன்றாம் பாலினத்தவர் புலம்புவதாய் காமராசன் தீட்டிய கவிதை இன்றும் உண்மையாகவே இருக்கிறது.

Views: - 0

0

0