நகைக்கடை உரிமையாளரை தாக்கிய முகமூடி கும்பல் : 8 சவரன் நகை பறிப்பு..! திருச்சியில் அதிர்ச்சி சம்பவம்..!

22 September 2020, 12:48 pm
trichy crime - updatenews360
Quick Share

திருச்சி பாலக்கரை பகுதியில் நகைக்கடை அதிபரை தாக்கி 8 சவரன் தங்க நகை பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி பாலக்கரை பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (50). இவர் திருச்சி, பாலிக்கரை, எடத்தெரு பகுதியில் நகை கடை வைத்துள்ளார். நகைக்கடை அதிபரான இவர், திருச்சி சின்ன கடை வீதியிலுள்ள நகை ஆசாரியிடம் புதிய நகைகளை செய்வித்து, அதை தனது கடையில் விற்பனை செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று இரவு சின்ன கடை வீதிக்கு சென்ற அவர், செயின், தோடு, வளையல் உள்ளிட்ட 8 பவுன் தங்க நகைகளை பெற்றுக்கொண்டு மீண்டும் தனது வீட்டிற்கு திரும்பியுள்ளார். இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிய இவரை நோட்டமிட்ட ஒரு கும்பல், இவரைப் பின்தொடர்ந்து வந்துள்ளனர். வீட்டிற்கு வந்த ரவிச்சந்திரன் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, வாகனத்தின் பெட்டியில் இருந்த நகைகளை எடுப்பதற்காக திறந்தபோது, திடீரென 3 இருசக்கர வாகனங்களில் அங்கு வந்த 7 பேர் கொண்ட மர்ம கும்பல், அவரை கீழே தள்ளி அவரிடமிருந்து நகையை பறித்தனர்.

மேலும் தடுக்க முயன்ற அவரை மற்ற சிலரும் தாக்கிவிட்டு நகையை பறித்துக் கொண்டு தப்பி ஓடினர். இதனால், பதறிப்போன அவர், இந்த சம்பவம் குறித்து திருச்சி பாலக்கரை காவல் நிலையத்தில் ரவிச்சந்திரன் புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல்துறையினர், அங்கு பதிவாகி இருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட பொழுது தப்பி ஓடிய கும்பலிடமிருந்து கைபேசி ஒன்று தவறி கீழே விழுந்துள்ளது. இதனையும் கைப்பற்றிய காவல்துறையினர் கைபேசியில் உள்ள எண்களை கொண்டும், அதில் உள்ள புகைப்படங்களை கொண்டும், அவர்கள் பயன்படுத்திய இன்ஸ்டாகிராம் போன்ற வலைதளங்களை கொண்டும் விசாரணை நடத்தினர்.

இதில் அந்த கும்பல் ஓயாமரி சுடுகாடு பகுதி மற்றும் தாரநல்லூர் பகுதிகளில் புகைப்படம் எடுத்துக் கொண்டது தெரியவந்துள்ளது. எனவே, கொள்ளை கும்பல் தாரநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுபோன்ற கொள்ளைச் சம்பவங்களை தடுக்கும் பொருட்டு ஆங்காங்கே சிசிடிவி கேமராக்களை பொருத்தி வரும் காவல்துறையினரால் தற்போது இந்த கும்பல் பிடிபட இருப்பது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.