‘காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி’..! பதவி ஏதும் கிடைக்காததால் திருச்சி சிவா ஏமாற்றம்!!

12 September 2020, 8:30 pm
trichy siva - updatenews360
Quick Share

சென்னை: கட்சியிலும் பதவி ஏதும் கிடைக்காத நிலையில் மாநிலங்களவைத் துணைத்தலைவர் பதவிக்குப் போட்டியிடும் வாய்ப்பும் பறிபோனதால் மாநிலங்களவை திமுக தலைவருமான திருச்சி சிவாவும் அவரது ஆதரவாளர்களும் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

திமுகவின் பொதுக்குழு செப்டம்பர் 9-ஆம் தேதி கூடியபோது கட்சியின் முக்கிய பதவிகளுக்கு பலரும் குறிவைத்தனர். முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் மகள் கனிமொழி உட்பட பலரும் பொருளாளர் பதவியையோ துணைப்பொதுச்செயலாளர் பதவியையோ எதிர்பார்த்தனர். உதயநிதிக்கு எதிராக வளரக்கூடும் என்ற காரணத்தால் கனிமொழி புறக்கணிக்கப்பட்டார் என்று கூறப்படுகிறது. கனிமொழி ஆதரவாளர்களை சமாதானப்படுத்தும் வகையில் அவரது ஆதரவாளரான ஆ.ராசாவுக்குத் துணைப்பொதுச்செயலாளர் பதவி தரப்பட்டது.

ஆனால், கட்சிப் பதவியொன்றை எதிர்பார்த்த மூத்த உறுப்பினர் திருச்சி சிவாவுக்கு பதவி ஏதும் தரப்படவில்லை. பொதுக்குழுவில் உரையாற்றும் வாய்ப்பு மட்டும் தரப்பட்டது. அவர் உரையாற்றிய பொதுக்குழுவிலும் உதயநிதிக்கும் நேருவுக்கும் பேனரில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது.

சிவா சார்ந்துள்ள டெல்டா மாவட்டத்திலும் அவருக்கு மேலே பலருக்கும் பதவி கிடைத்துள்ளது. தஞ்சாவூரைச் சேர்ந்த டி.ஆர். பாலுவுக்கு கட்சியின் பொருளாளர் பதவி கிடைத்துள்ளது. அவரது சொந்த மாவட்டத்திலும் அவருக்குப் பின்வந்த கே.என்.நேருவுக்கு முதன்மை செயலாளர் பதவி தரப்பட்டுள்ளது. மேலும், திருச்சியில் திமுக இளைஞர் அணித்தலைவரான உதயநிதிக்கு மிகவும் நெருக்கமான மகேஷ் பொய்யாமொழியின் ஆதிக்கம் நிலவி வருகிறது.

இந்நிலையில், மாநிலங்களவைத் துணைத்தலைவர் தேர்தலில் நிற்கும் வாய்ப்பு சிவாவுக்கு வழங்கப்படுவதாக காங்கிரஸ் சார்பாக பேசப்பட்டது. ஏற்கனவே இருந்த, ஹரிவன்ஷ் நாராயண்சிங்கின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி காலம் முடிவடைந்ததை அடுத்து, மாநிலங்களவைத் துணைத்தலைவர் பதவி நிரப்பப்படாமல் உள்ளது. மழைக்கால கூட்டத்தொடருக்காக நாடாளுமன்றத்தில் இரு அவைகளும், அடுத்த வாரம் கூடவுள்ளன. கூட்டத்தொடரின்போது மாநிலங்களவைத் துணைத் தலைவர் தேர்தல் நடைபெற இருக்கிறது.

Parliment 01 updatenews360

ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த ஹரிவன்ஷ் நாராயண்சிங், தற்போது மீண்டும் மாநிலங்களவைக்குத் தேர்வாகியுள்ளதாலும், பீகார் சட்டசபைத் தேர்தல் வரப்போவதாலும், அவரையே மீண்டும் தேசிய ஜனநாயகக்கூட்டணி வேட்பாளராக, பாஜக, நிறுத்தயுள்ளது. ஹரிவன்ஷ் நாராயண்சிங்கிற்கு போட்டியாக, பிற கட்சிகளுடன் ஆலோசித்து, பொதுவேட்பாளரை நிறுத்த காங்கிரஸ் முடிவெடுத்தது. கூட்டணிக் கட்சியான திமுக வேட்பாளரை எதிர்க்கட்சிகள் சார்பில் நிறுத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டது. திமுகவுடன் பேச்சு நடத்திய பிறகு அக்கட்சியின் சார்பில் திருச்சி சிவாவை நிறுத்த திமுக ஒப்புதல் தெரிவித்தது.

ஆனால், பிற கட்சிகள் எதிர்ப்பால் காங்கிரஸ் திட்டத்துக்குப் பின்னடைவு ஏற்பட்டது. ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி வேட்பாளரான மனோஜ் ஜா எதிர்க்கட்சிகள் சார்பில் நிறுத்தப்பட வேண்டும் என்று பிற கட்சிகள் கோரின. நவம்பர் மாதத்தில் பீகார் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் பீகார் மாநிலத்தைகச் சேர்ந்தவரையே பாஜக கூட்டணி நிறுத்தியுள்ளது. அதே முறையைப் பின்பற்ற எதிர்க்கட்சிகள் பலவும் வலியுறுத்தின. இதைத் தொடர்ந்து மனோஜ் ஜா எதிர்க்கட்சி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். எனவே, திருச்சி சிவாவுக்கு அந்த வாய்ப்பும் பறிபோயுள்ளது. எனவே, அவரும் அவரது ஆதரவாளர்களும் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

Views: - 0

0

0