தட்டார்மடம் இளைஞர் கொலை வழக்கு : கைது செய்யப்பட்ட 4 பேருக்கு சிபிசிஐடி காவல்!!

30 September 2020, 4:51 pm
tuticorin Youth- updatenews360
Quick Share

தூத்துக்குடி : தட்டார்மடம் அருகே இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 4 பேரையும், 6 நாட்கள் சிபிசிஐடி போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க கோவில்பட்டி குற்றவியல் நீதிமன்ற நடுவர் பாரதிதாசன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே உள்ள சொக்கன்குடியிருப்பினை சேர்ந்த வாலிபர் செல்வன் கடந்த 17ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் ஹரி கிருஷ்ணன், மற்றும் அதிமுக பிரமுகர் திருமணவேல் உள்ளிட்ட 6 பேர் ஆள் கடத்தல் கொலை வழக்கு உள்ளிட்ட பல பிரிவுகளில் நெல்லை மாவட்டம் திசையன்விளை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் இதுவரை சின்னதுரை மற்றும் முத்துராமலிங்கம் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டு ஸ்ரீவைகுண்டம் சிறையில் அடைக்கப்பட்டனர். திருமணவேல் மற்றும் முத்துகிருஷ்ணன் ஆகிய இரண்டு பேர் சென்னை நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இவர்கள் இருவரையும் போலீசார் தூத்துக்குடி பேராவூரணி கிளைச் சிறையில் அடைத்தனர். முதல் குற்றவாளியான காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இதற்கிடையில், செல்வன் கொலை வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி டிஎஸ்பி அணில்குமார் தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திருமண வேல், முத்துகிருஷ்ணன், சின்னதுரை, முத்துராமலிங்கம் ஆகிய 4 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீஸார் கோவில்பட்டி குற்றவியல் நீதிமன்றம் எண்-1ல் மனுதாக்கல் செய்தனர்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், சிறையில் இருந்த திருமண வேல், முத்துகிருஷ்ணன், சின்னதுரை, முத்துராமலிங்கம் ஆகிய 4 பேரையும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவில்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நான்கு பேரையும், 8 நாள் காவலில் விசாரிக்க சிபிசிஐடி போலீசார் அனுமதி கோரினர் .

இதனை விசாரித்த குற்றவியல் நீதிமன்ற நடுவர் பாரதிதாசன், 4 பேரையும் அக்டோபர் 6 ந்தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கொடுத்தார். இதனை தொடர்ந்து சிபிசிஐடி டிஎஸ்பி அனில் குமார் தலைமையிலான போலீசார் நான்கு பேரையும் காவலில் விசாரிக்க தூத்துக்குடிக்கு அழைத்து சென்றனர்.

Views: - 12

0

0