கோவை காதி கிராப்ட்டில் பட்டு சேலைகள் திருடப்பட்ட வழக்கில் 2 பேர் கைது: 47 புடவைகள் பறிமுதல்..!!

Author: Rajesh
4 August 2021, 4:40 pm
Quick Share

கோவை: அவினாசி சாலை காதி கிராப்ட் விற்பனையகத்தில் ரூ.5 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான அசல் பட்டு டவைகள் திருடப்பட்ட வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டனர்.

கோவை அவினாசி சாலை உப்பிலிப்பாளையம் மேம்பாலம் அருகிலுள்ள காதிகிராப்ட் விற்பனையகத்தில் கடந்த மாதம் 31ம் தேதி இரவு வழக்கம் போல ஊழியர்கள் விற்பனையகத்தை பூட்டி சென்றனர். மறுநாள் வந்து பார்த்தபோது, விற்பனையகத்தை உடைத்து உள்ளே இருந்த ரூபாய் 5 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான 58 அசல் பட்டு புடவைகள் திருடி செல்லப்பட்டிருந்தது தெரியவந்தது.

இந்த விற்பனையகத்துக்கு அருகேயுள்ள தண்டுமாரியம்மன் கோவிலின் உண்டியலையும் உடைத்து கொள்ளையடிக்க முயன்றதும், மேலும், பாப்பநாயகன்பாளையத்தில் உள்ள பெட்டிக்கடையை உடைத்து சிகரெட் பண்டல்களும் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இந்த 3 சம்பவங்கள் தொடர்பாக பந்தைய சாலை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், புடவைகளை திருடிச் சென்றது புலியகுளம் ஏரிமேட்டை சேர்ந்த முருகன் என்பது தெரியவந்தது. திருடிய புடவைகளை செல்வபுரத்தை சேர்ந்த முகமது ஜலீல் என்பவரிடம் முருகன் விற்பனை செய்ததும், அவர் புடவைக்கான தொகையாக ரூபாய் 6 ஆயிரம் மட்டுமே முருகனுக்கு கொடுத்துள்ளார்.

மறுநாள் செய்தித்தாள்களில் திருடப்பட்ட புடவைகளின் மதிப்பு ரூபாய் 5 லட்சத்து 80 ஆயிரம் என வெளியானதை பார்த்த முருகன், மறுநாள் முகமது ஜலீலை சந்தித்து மீதித்தொகையை வாங்க திட்டமிட்டிருந்தபோது, காவல்துறையினரிடம் முருகன் சிக்கினார். தொடர்ந்து, முருகன் மற்றும் ஜலீலை பந்தைய சாலை காவல்துறையினர் கைது செய்தனர்.

இருவரிடமிருந்து 47 புடவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், முருகன் மதுபோதையில் ஆட்டோவில் செல்லும்போது, அந்த ஆட்டோ ஓட்டுநரிடமும் சில புடவைகளை கொடுத்ததும், அந்த புடவைகளையும் மீட்கும் நடவடிக்கைகளில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Views: - 634

0

0