உங்கள பத்தி அப்படி பேசுனது தப்புதான்.. வாபஸ் வாங்கிக்கொள்கிறேன் : கோவையில் உதயநிதி பேச்சு!!

Author: Udayachandran RadhaKrishnan
20 March 2022, 9:20 pm
Udhayanithi - Updatenews360
Quick Share

கோவை : பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை, மகளிர்களுக்கு தையல் இயந்திரம் வழங்கிய உதயநிதி ஸ்டாலின் மக்களிடம் பேசிய வார்த்தையை வாபஸ் வாங்குவதாக தெரிவித்துள்ளார்.

கோவை காளப்பட்டி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 524 பள்ளி மாணவ மாணவியருக்கு தலா 10,000 ரூபாய் கல்வி உதவித்தொகை மற்றும் ஏழை எளிய பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள்(தையல் இயந்திரம்) வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியில் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு உதவித் தொகையும் 500 ஏழை எளிய பெண்கள் தையல் இயந்திரமும் வழங்கினார்.

இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், முதலில் பாட்டிக்கும் அம்மாவுக்கும் அக்காவுக்கும் என அனைவருக்கும் நான் நன்றி சொல்கிறேன். எல்லோருடனும் செல்பி எடுக்க வேண்டும் என்று நினைக்கின்றனர் எனக்கும் அனைவருடனும் செல்பி எடுக்க வேண்டும் என்று ஆசை தான்.

கடந்த முறை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக முதல்வர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு கோவை மக்களை நம்ப முடியாது குசும்பு பிடித்தவர்கள் என்று கூறிச் சென்றேன் அதனை தற்போது நான் வாபஸ் வாங்கிக் கொள்கிறேன்.

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் 96 வார்டுகளை திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகளை வெற்றிபெற்றுள்ளன. அதேபோல் 7 நகராட்சி களையும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை கோவை மக்கள் வெற்றி பெறச் செய்துள்ளனர்.

எனவே நான் கூறிய வார்த்தைகளை வாபஸ் வாங்கிக் கொள்கிறேன். உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெறச் செய்தால் அடிக்கடி கோவை வருவேன் என்று கூறினேன் அதேபோல் தற்போது வந்துள்ளேன்.

இந்த வெற்றியை பெற பாடுபட்ட அனைத்து கழக நிர்வாகிகளுக்கும் தோழமைக் கட்சி நிர்வாகிகளுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். குறிப்பாக அண்ணன் செந்தில் பாலாஜி அவர்களுக்கு மிகுந்த நன்றியை கூறிக்கொள்கிறேன்.

தலைவர் சொன்னதைப்போல 100% அல்ல 1000% செய்து காட்டுவேன் என்று கூறினார். அண்ணன் செந்தில் பாலாஜி அதே போல் செய்து காட்டியுள்ளார். இது அவருக்கு கிடைத்த வெற்றி மட்டுமல்ல முதல்வரின் 8 மாத கால ஆட்சிக்கு கிடைத்த வெற்றி என தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து பள்ளி மாணவர்களுடன் சிறிது நேரம் உரையாடிய செல்பி எடுத்துக்கொண்டார். இந்நிகழ்வில் கோவை மாவட்ட திமுக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Views: - 686

0

0