உடுமலை சங்கர் கொலை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு..!

18 August 2020, 9:54 am
Quick Share

உடுமலை சங்கர் கொலை வழக்கில் கவுசல்யாவின் தந்தை சின்னசாமி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், பழனியைச் சேர்ந்த கவுசல்யா மாற்று ஜாதியைச் சேர்ந்த சங்கர் என்பவரை கடந்த 2015-ஆம் ஆண்டு பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் கடந்த 2016-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13-ஆம் தேதி கவுசல்யாவையும், அவரது கணவர் சங்கரையும், உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்தில் மூன்று பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டியது.

அதில் சங்கர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், பலத்த காயங்களுடன் கவுசல்யா உயிர் தப்பினார். இந்த வழக்கில் கவுசல்யாவின் தந்தை உள்ளிட்ட 6 பேருக்கு 2017 டிசம்பரில் திருப்பூர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இதை எதிர்த்து குற்றவாளிகள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் நிர்மல் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு கவுசல்யாவின் தந்தை சின்னசாமியை விடுதலை செய்து உத்தரவிட்டனர்.

மற்ற 5 பேருக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். இதனைத்தொடர்ந்து கொலை செய்யப்பட்ட சங்கரின் குடும்பத்தினர், சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

இதனை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சியினர் தமிழக அரசுக்கு முன்னதாக கடிதம் எழுதி இருந்தனர். இந்த சூழலில் தற்போது, உடுமலை சங்கர் கொலை வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது.

அதில், கவுசல்யா தந்தை சின்னசாமியை விடுவிக்கும் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராகவும், ஜெகதீஷ் உள்ளிட்ட 5 பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்ததற்கும் எதிர்ப்பு தெரிவித்தும் மேல்முறையீடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.