ஆந்த்ராக்ஸ் நோயால் உயிரிழந்த காட்டு யானை: கால்நடைகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது..!!

14 July 2021, 1:13 pm
Quick Share

கோவை: ஆனைகட்டி வனப்பகுதியில் ஆந்த்ராக்ஸ் காரணமாக உயிரிழந்த காட்டு யானையின் உடல் வனத்துறையினரால் எரியூட்டப்பட்டது. மேலும் வனப்பகுதியை ஒட்டியுள்ள கால்நடைகளுக்கு தடுப்பூசி போடும் பணிகளும் துவங்கி உள்ளது.

கோவை மாவட்டம் ஆனைகட்டி வனப்பகுதியில் சேம்புகரை என்ற இடத்தில் 12 வயது மதிக்கத்தக்க பெண் யானை உயிரிழந்து கிடந்தது. அந்த யானையை வனத்துறையினர் பார்த்த போது வாய் மற்றும் ஆசன வாய் பகுதிகளில் இருந்து ரத்தம் வெளியேறி இருந்தது. இது ஆந்த்ராக்ஸ் அறிகுறி என்பதால், யானையின் இரத்தம் பரிசோதனை செய்யப்பட்டது.

அதில் ஆந்த்ராக்ஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து இன்று முழு கவச உடை அணிந்த வன ஊழியர்கள் யானையின் உடல் மீது பார்மலின் ரசாயனதை ஊற்றினர். பின்னர் யானையின் உடலானது தீ வைத்து எரிக்கப்பட்டது.

இதனிடையே ஆந்த்ராக்ஸ் தொற்றால் யானை உயிரிழந்தது குறித்து மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ், மாவட்ட ஆட்சியர் சமீரனுக்கு தகவல் தெரிவித்தார். இதனை தொடர்ந்து சேம்புக்கரை வனப் பகுதியை சுற்றி எட்டு கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள கால்நடைகளுக்கு தடுப்பூசி போட உத்தரவிடப்பட்டது. கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகள் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடும் பணிகளை துவங்கினர்.

இரண்டாம் கட்டமாக ஜம்புகண்டி பகுதியில் இன்று 150 தடுப்பூசிகள் மாடு மற்றும் செம்மறி ஆடுகளுக்கு போடப்பட்டது. தொடர்ச்சியாக யானை இறந்து இருந்த இடத்தை சுற்றி இருக்கக் கூடிய மற்ற கிராமங்களில் உள்ள கால்நடைகளுக்கு தடுப்பூசி கூடுவதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Views: - 124

0

0