வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு ரத்துக்கு எதிர்ப்பு : பல மாவட்டங்களில் பாமகவினர் போராட்டம்..!!!!
Author: Babu Lakshmanan2 November 2021, 11:02 am
கரூர் ; வன்னியர்களுக்கான 10.5% உள் இட ஒதுக்கீடு அரசாணையை ரத்து செய்ததை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பாமகவினர் போராட்டம் நடத்தினர்.
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான பிரிவில் வன்னியர்களுக்கு 10.5 உள்இடஒதுக்கீட்டை கடந்த அதிமுக அரசு கொண்டு வந்தது. இதை எதிர்த்து பல்வேறு வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டன. இந்த வழக்கின் விசாரணையின் போது, போதிய விளக்கத்தை தற்போதைய அரசு வழங்காததால், வன்னியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இடஒதுக்கீட்டை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்தது. இது பாமகவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு அரசாணையை ரத்து செய்ததை கண்டித்து கரூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் பி.எம்.கே.பாஸ்கரன் தலைமையில் கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானாவில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் தமிழக அரசு சட்ட ரீதியாக மேல்முறையீட்டு நடவடிக்கைகளை உடனடியாக செய்ய வேண்டும், தங்களுக்கான உரிமையை மீட்டு தர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கமிட்டனர்.
இந்த நிகழ்வில் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் சதீஸ்முதலியார், நகர தலைவர் ராஜேஷ்கணன், நகர செயலாளர் முருகேசன், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் ரமேஷ் மற்றும் பாமக முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதேபோல, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பாமகவினர் போராட்டம் நடத்தினர்.
0
0