வந்தே பாரத் ரயிலை வரவேற்பதில் போட்டி… பாரத மாதாவுக்கு ஜே Vs ஜெய் பீம் ; பாஜக – விசிக இடையே தள்ளுமுள்ளு..!!

Author: Babu Lakshmanan
25 September 2023, 10:28 am
Quick Share

அரியலூர் – வந்தே பாரத் ரயிலை வரவேற்கும் நிகழ்ச்சியின் போது, கோஷம் எழுப்புவதில் பாஜகவினர், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

இந்திய ரயில்வே துறையில் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்டு நாடு முழுவதிலும் வந்தே பாரத் என்ற பெயரில், அதி நவீன வசதிகளுடன் சொகுசு ரயில்கள் முக்கிய நகரங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 9 வந்தே பாரத் ரயில்களின் சேவையை தொடங்கி வைத்தார்.

அதில், தென் தமிழகத்தில் மிக முக்கியமான மாவட்டம் வழியாக தலைநகரை அடையும் விதமாக திருநெல்வேலி – சென்னை எழும்பூர் இடையே வந்தே பாரத் ரயில் சேவை துவங்கப்பட்டது. திருநெல்வேலியில் இருந்து மதுரை, விருதுநகர், திருச்சி, அரியலூர் மார்க்கமாக சென்னை வரை இந்த ரயில் சேவை இயக்கப்படுகிறது.

இந்நிலையில், திருநெல்வேலியில் தொடங்கி வைக்கப்பட்ட வந்தே பாரத் ரயில் நேற்று மாலை 6:30 மணி அளவில் அரியலூர் ரயில் நிலையம் வந்தது. இந்த ரயிலுக்கு சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவன், அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா உள்ளிட்ட பொதுமக்கள் ரயில் பயணிகள் மற்றும் மாணவ, மாணவிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பல்வேறு தரப்பினரும் வந்தே பாரத் ரயிலுக்கு முன்பு செல்பி எடுத்து மகிழ்ந்தனர் மேலும் அரியலூர் நகரில் உள்ள வித்யா மந்திர் பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் வந்தே பாரத் ரயிலில் ஏறி உற்சாகத்துடன் பயணம் செய்தனர்.

இதனையடுத்து, சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவன் பச்சைக்கொடி அசைக்க, வந்தே பாரத் ரயில் விருத்தாசலம் விழுப்புரம் மார்க்கமாக சென்னை நோக்கி புறப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திருச்சி கோட்ட ரயில்வே துறை உயர் அதிகாரிகள், பொதுமக்கள், மாணவ, மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், வந்தே பாரத் ரயில் கிளம்பிய போது, பாஜகவினர் பாரத மாதாவுக்கு ஜெ என கூறி முழக்கமிட்டனர். அப்போது, அங்கிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஜெய் பீம் என முழக்கமிட்டனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்படாத வண்ணம் போலீசார் தடுத்தனர். இதனால், ரயில் நிலையத்தில் பரபரப்பு நிலவியது.

Views: - 199

0

0