அதிமுகவுடன் பாஜக மீண்டும் கைகோர்த்தால் அண்ணாமலைக்கு ஆப்பு… வீண் வாய் சவாடல் நல்லதல்ல ; எஸ்வி சேகர் கடும் தாக்கு!!

Author: Babu Lakshmanan
25 September 2023, 9:47 am
Quick Share

தமிழ்நாட்டில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி ஏற்பட்டால் நிச்சயமாக அண்ணாமலை பாஜக தலைவராக இருக்க மாட்டார் என்று எஸ்வி சேகர் தெரிவித்துள்ளார்.

சிவந்தி ஆதித்தனாரின் 88 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை போயஸ் கார்டனிலுள்ள அவரது நினைவு இல்லத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் அவரது புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தினர். இவரின் பிறந்தநாளை முன்னிட்டு நெல்லை நாடார் மற்றும் பெரம்பூர் டான் போஸ்கோ பள்ளிகளில் நடத்தப்பட்ட கைப்பந்து, கபடி, கால்பந்து போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இதில், கலந்து கொண்டு செய்தியாளர்களிடம் பேசிய எஸ்வி சேகர் கூறியதாவது ;- 1973 காலகட்டங்களில் எனக்கு நிறைய ஊக்கம் அளித்திருக்கிறார். தமிழுக்காக, கல்விக்காக, விளையாட்டுக்காக நிறைய செய்திருக்கிறார், என்றார்.

தொடர்ந்து, பாஜக மாநில தலைவர் அ ண்ணாமலை, அண்ணா பற்றி பேசியதற்கு எஸ்வி சேகர் பதிலளித்ததாவது :- அண்ணாமலைக்கு அரசியலில் ஆரம்ப கட்ட அனுபவமே கிடையாது. கூட்டணி தர்மம் என்று ஒன்று இருந்தால் அதை கடைபிடிக்க வேண்டும். இல்லை என்றால் ஆரம்பத்திலேயே முறித்துக் கொள்ள வேண்டும். கூட்டணியை முறித்துக் கொள்வதும், கடைப்பிடிப்பதும் அண்ணாமலை கையில் இல்லை, டெல்லியில் தான் முடிவு எடுக்க வேண்டும்.

தனக்கென்று ஒரு தனி அஜெண்டா வைத்து அண்ணாமலை செயல்படுகிறார். தேவையில்லாமல் வாய் சவடால் விடுவது கட்சிக்கு நன்மையை தராது. மேலிடத்தில் கூறுவதை கேட்டு நடந்தால் தான் இங்கு கட்சி வளர்ச்சி அடையும். தற்பொழுது அண்ணாமலை செய்து வரும் காரியங்கள் அவரது பெயரையும், புகழையும் வளர்த்துக் கொள்வதற்காக மட்டும்தான்.

என்னைப் போன்று கட்சிக்காக உழைக்கின்றவர்களை ஓரம் கட்டிவிட்டார்கள். மோடி சொன்னதால்தான் இந்த கட்சியிலேயே சேர்ந்தேன். அப்படி இருக்கும் பொழுது என்னை பார்த்து ஏன் பயப்பட வேண்டும். நேர்மையாக இருக்கின்ற பிரபலங்கள் திடுக்கென்று வந்தால் கட்சியில் இருப்பவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது, என்றார்.

நீங்கள் கட்சியில் இருப்பது அண்ணாமலைக்கு பிடிக்கவில்லையா? என்ற கேள்வி குறித்து பேசிய எஸ்.வி சேகர், அண்ணாமலைக்கு அவரைத் தவிர வேறு யாரு கட்சியில் இணைந்தாலும் பிடிக்காது. தமிழ்நாட்டில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி ஏற்பட்டால் நிச்சயமாக அண்ணாமலை பாஜக தலைவராக இருக்க மாட்டார்.
அண்ணாமலை 10 வருடங்களாக துப்பாக்கி பிடிச்சனு சொல்றாரு. ஒருமுறையாவது ட்ரிகர் அழுத்திருப்பாரா? ஏடிஎம் வாசலில் இருக்கக்கூடிய செக்யூரிட்டி கூட தான் துப்பாக்கி வைத்துக் கொண்டிருக்கிறார். அதற்காக அவர் பெரிய ஆளாகிவிடமுடியுமா?

சனாதனம் என்பது ஒரு வாழ்க்கை முறை, அதை யாராலும் ஒழிக்க முடியாது. வீரமணி அவர்கள் எத்தனை ஆண்டுகளாக கத்திக்கொண்டு தான் இருக்கிறார். இதுவரை எந்த மாற்றமும் இல்லை. ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொள்ளும் சேகர பாபு அவர்களே, வருடா வருடம் சபரிமலைக்கு செல்வது வழக்கமாக வைத்திருக்கிறார், என தெரிவித்துள்ளார்.

Views: - 191

0

0