அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.9 லட்சம் மோசடி : வேலூரில் இளைஞர் கைது…

Author: kavin kumar
8 January 2022, 7:18 pm
Quick Share

வேலூர்: சிறை மற்றும் அரசு துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.9 லட்சம் வரை மோசடி செய்த இளைஞரை மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர்.

வேலூர் அடுத்த மேல்மொனவூர் ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் உதயகுமார். சிறு வயதிலேயே தாய் தந்தையை இழந்த இவர் 10-வது வரை மட்டுமே படித்துள்ளார். இந்நிலையில் வேலூரில் உள்ள உணவகம் ஒன்றில் மாவு பிசையும் வேலை செய்து வந்துள்ளார். அப்போது 2017-ம் ஆண்டு முதல் முறையாக பேருந்தில் பயணிகளிடம் பர்ஸை பிட்பேக்கெட் அடித்து கைதாகி சிறைக்கு சென்றுள்ளார். சிறையில் இருந்து வெளியே பின்னர் தொடர் திருட்டு சம்பவங்களில் இடுபட்டு வந்துள்ளார். வேலூர் வடக்கு காவல் நிலையம், பாகாயம் காவல் நிலையம், காட்பாடி காவல் நிலையம் ஆகியவற்றில் உதயகுமார் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் இவர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டு 11 மாதங்கள் சிறையில் இருந்துள்ளார்.

அப்போதும் வெளியே வந்தவர் திருந்தி வாழாமல், திருட்டு தொழில் செய்தால் மாட்டிக்கொள்கிறோம் என்பதை உணர்ந்து திருட்டை தவிர்த்து மாற்று வழியில் பணம் சம்பாதிக்க முடிவெடுத்துள்ளார். இதற்க்காக அவர் தேர்ந்தெடுத்த பாதை தான் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ஆசை காட்டி பட்டதாரி இளைஞர்களையும், பெண்களையும் ஏமாற்றலாம் என முடிவு செய்துள்ளார். இதற்க்காக வேலூர் மத்திய சிறையில் சைக்காலஜி கவுன்சிலராக வேலை செய்து வருவது போன்ற ஒரு போலியாள காவலர் அடையாள அட்டை தயார் செய்து அதை மற்றவர்களிடம் காட்சி தான் ஒரு போலீஸ் என்றும், சிறை துறை, காவல் துறை, பல அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி ஒவ்வொரு நபரிடமும் தலா 65 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை வசூலித்துள்ளார். தற்போதுவரை கணியம்பாடி பகுதியை சேர்ந்த அரவிந்த், பிரம்பபுரத்தை சேர்ந்த சாந்தகுமார், விஷ்ணுகுமார், மணிகண்டன் ஆகிய பட்டதாரி இளைஞர்கள் மோசடி பேர்வழி உதயகுமிரிடம் பணம் கொடுத்து ஏமாந்து புகார் அளித்துள்ளனர்.

இதேபோல சங்கமித்ரா, சுதா, பிரபாவதி என்ற பெண்களிடம் “நீங்கள் 20 பேர் கொண்ட ஒரு குழுவை உருவாக்குங்கள், அதில் தலா 2800 ரூபாய் கொடுத்தால் 85 ஆயிரமும், 5000 கொடுத்தால் 1 லட்சம் வரை லோன் வாங்கி தருவதாக கூறி பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்துள்ளார். அப்பெண்கள் தொடர்ந்து தொந்தரவு செய்யவே “இந்தாங்க சப் கலெக்டர் நம்பர் நீங்களே போன் பண்ணி கேளுங்க” என ஒரு நம்பரை கொடுத்துள்ளார். அந்த எண்ணுக்கு அப்பெண்கள் போன் செய்த போது உதயகுமாரே சப் கலெக்டர் போல மிமிக்கிரி செய்து பேசியுள்ளார். இதனை அறிந்த பெண்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறித்து காவல் நிலையில் புகார் அளித்துள்ளனர். இது போன்ற மோசடி செயலை செய்யும் உதயகுமார் ஏமாற்ற இருப்பவர்களை நம்ப வைக்க ஒரு பாண்டு பத்திரத்தில் எழுதி கையெழுத்தும் போட்டுக்கொடுத்துள்ளார். இது போல மொத்தம் 8 லட்சத்தி 33 ஆயிரத்தி 800 ரூபாய் வரை ஏமாற்றியுள்ளார்.

இது குறித்து இதுரை 7 புகார்கள் வந்த நிலையில், வழக்கு பதிவு செய்த வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் வேலூர் அடுத்த விருப்பாச்சிபுரம் எழில் நகரில், தனக்கு கல்யாணம் செய்ய இருப்பதாக கூறி வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்துள்ளார். எஸ்.பி ராஜேஷ் கண்ணன் உத்தரவின் பேரில், குற்றப்பிரிவு ஆய்வாளர் கவிதா தலைமையிலான காவலர்கள் அங்கு அவரை கைது செய்த காவல் துறையினர் அவரிடம் இருந்து 21 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் போலி போலீஸ் ஐடி கார்டையும் பறிமுதல் செய்து உதயகுமாரை கைது செய்து விசாரணைக்கு பின் நீதிமன்ற காவலில் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Views: - 607

0

0