சார்ஜரில் இருந்து செல்போனை கழற்றிய பள்ளி மாணவன்.. ஒரு நிமிடத்தில் முடிந்து போன வாழ்க்கை… வேலூரில் நிகழ்ந்த சோகம்..!!

Author: Babu Lakshmanan
25 May 2022, 3:59 pm
Quick Share

வேலூரில் சார்ஜரில் இருந்து செல்போனை கழற்றியபோது மின்சாரம் தாக்கியதில் பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர் சின்னஅல்லாபுரம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் செந்தில். இவருடைய மனைவி பானுமதி. இவர்களுடைய மகன் கோபிநாத் (9). செந்தில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையின் எதிரே உள்ள பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். மேலும். அவர் அங்கு ஸ்டியோ வைத்துள்ளார்.

கோபிநாத் கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் பள்ளியில் 4&ம் வகுப்பு படித்து முடித்துள்ளார். தற்போது கோடை விடுமுறை என்பதால் பானுமதி, கோபிநாத் ஆகியோர் வேலூரில் உள்ள சொந்த வீட்டிற்கு வந்தனர். நேற்று இரவு பானுமதி செல்போனுக்கு சார்ஜர் போட்டுள்ளார். அப்போது, குளித்துவிட்டு வந்த கோபிநாத் ஈரக்கையுடன் செல்போனை சார்ஜரில் இருந்து கழற்றி உள்ளார்.

அந்த சமயம் எதிர்பாராத விதமாக சிறுவன் மீது மின்சாரம் பாய்ந்து அலறியபடி சம்பவ இடத்தில் மயங்கி சரிந்து விழுந்துள்ளார். கோபிநாத் அலறல் சத்தம் கேட்டு விரைந்து வந்த பானுமதி மற்றும் குடும்பத்தினர் உடனடியாக அவரை சிகிச்சைக்காக வேலூர் பென்ட்லேன்ட் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். அதையடுத்து உடல் பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து பாகாயம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சார்ஜரில் இருந்து செல்போனை கழற்றியபோது மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினர் மற்றும் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 913

0

0