கல்லூரி துணை முதல்வரை கடத்தி பணம் பறிப்பு : தி.மு.க. பிரமுகர் உள்பட 3 பேர் கைது.. மேலும் 3 பேருக்கு வலைவீச்சு!!

Author: Babu Lakshmanan
25 October 2021, 8:56 pm
trichy arrest - updatenews360
Quick Share

திருச்சி : தனியார் கல்லூரி துணை முதல்வரை கடத்தி வைத்து பணத்தை பறித்த திமுக பிரமுகர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி கருமண்டபம் வசந்த் நகர் மாரியம்மன் அவென்யூ பகுதியை சேர்ந்தவர் விமல் ஆதித்யன். இவர் தனியார் கல்லுாரி பேராசிரியராக பணியாற்றி வந்தார். திருமணமாகி இரு குழந்தைகள் உள்ள நிலையில், இவரின் ஒழுங்கீன செயல் காரணமாக அவரை கல்லூரி நிர்வாகம் பணி நீக்கம் செய்தது. தற்போது பிராட்டியூர் அருகே மற்றொரு தனியார் கல்லூரியில் பேராசிரியர் மற்றும் துணை முதல்வராக பணியாற்றி வருகிறார்.

விமல் ஆதித்தனுக்கு தான் முதலில் பணியாற்றிய கல்லூரியில் அவருடன் பணியாற்றி வந்த நிவேதிதா என்ற பெண்ணுடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே, நிவேதிதாவிற்கு, பேராசிரியர் விமல் ஆதித்தனே வரன் தேடி, துறையூரை சேர்ந்த சசிகுமார் என்பவரை நிச்சயித்து திருமணம் செய்து வைத்துள்ளார். திருமணத்திற்கு பின்னரும் விமல் ஆதித்தன்-நிவேதா தொடர்பு நீடித்து வந்துள்ளது. இந்நிலையில் இருவருக்கும் உள்ள கள்ளத்தொடர்பு கணவர் சசிகுமாருக்கு தொிய வந்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த கணவர் சசிகுமார் தன்னுடன் சிலரை சேர்த்து கொண்டு, தற்போது துணை முதல்வராக பணியாற்றும் விமல் ஆதித்யனை கடத்தி சென்று தனக்கான திருமணச்செலவு ரூபாய் 15 லட்சம் கேட்டு மிரட்டி உள்ளார்.

அதைத்தொடர்ந்து, ரூ.2 லட்சம் ரூபாயை மிரட்டலுக்கு பயந்து விமல் ஆதித்தன் கொடுத்துள்ளார் என கூறப்படுகிறது. ஆனாலும் இது போதாது இன்னும் வேண்டும் என்று கேட்டு விமல் ஆதித்தனை அடித்து துன்புறுத்தி உள்ளனர். மேலும் விமல்ஆதித்யனின் மனைவியிடமும் வீட்டிற்க்கு சென்று மிரட்டி கேட்டதாக கூறப்படுகிறது.

எப்படியும் தன் கணவருக்கு வந்த பிரச்சினை தீர வேண்டும் என்று விமலின் மனைவி, மேலும் ரூ.40 ஆயிரம் மற்றும் சொத்து பத்திரங்களை கொண்டு சென்று சசிகுமாரிடம் கொடுத்து கணவரை மீட்டுள்ளார். அப்போது அந்த ஆவணத்துடன் விமல் ஆதித்தன்-நிவேதா தொடர்புடைய சில ஆபாச வீடியோக்களும் சிக்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், திருச்சி செசன்ஸ் நீதிமன்ற காவல் நிலையத்தில் விமல் ஆதித்தன் தன்னை கடத்தி சென்று சிலர் பணம் பறித்ததாக புகார் கொடுத்தார் – அதன் பேரில் ஆய்வாளர் (பொறுப்பு) கோசலைராமன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

இந்த நிலையில் கடத்தல் வழக்கு தொடர்பாக துறையூரை சேர்ந்த சசிகுமார். திருச்சி மிளகுபாறையை சேர்ந்த திமுக பிரமுகர் லாசர் ஆரோக்கியராஜ் மற்றும் பிரசாந்த் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 3 பேரை காவல்துறையினர் தேடி வருகிறார்கள் –

துணை முதல்வரான பேராசிரியர் கடத்தல் வழக்கில் பல்வேறு புகார்கள் எழுந்துள்ளது. அதாவது, கடத்தல் புகார் கொடுத்த விமல்ஆதித்தன், தன்னுடன் பழகிய பெண்ணுடன் உறவு கொள்ளும் 30க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்களை பதிவு செய்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது. அந்த வீடியோக்கள்தான் தற்போது காவல் துறையினர் கையில் சிக்கி உள்ளதாக கூறப்படுகிற வேலையில், காவல்துறையினரும் இந்த வழக்கு தொடர்பாக முறையாக பதில் அளிக்கவும் தயக்கம் காட்டி வருகிறார்கள் எனவும் கூறப்படுகிறது.

விமல்ஆதித்யனால் வேறு பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளார்களா..? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 263

0

0