ஊரடங்கு உத்தரவு மீறல் : திமுக எம்.எல்.ஏ பொன்முடி உள்ளிட்ட 317 பேர் மீது வழக்குப்பதிவு!

30 August 2020, 12:12 pm
Case Filed Ponmudi - Updatenews360
Quick Share

விழுப்புரம் : 144 தடை உத்தரவை மீறியதாக வும், நோய் தொற்று பரவும் என்று தெரிந்தே மக்களை கூட்டி கூட்டம் நடத்தியதாக திமுக சட்டமன்ற உறுப்பினர் பொன்முடி மற்றும் முன்னாள் எம்.பி. லட்சுமணன் உள்ளிட்ட 317 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சமீபத்தில் அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்த முன்னாள் அதிமுக மாவட்ட செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் லட்சுமணன் மாவட்டம் முழுவதும் இருந்து அவரது ஆதராவாளர்கள் திமுகவில் இணையும் நிகழ்ச்சி  விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர் பொன்முடி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். முன்னாள் எம்.பி. டாக்டர் லட்சுமணன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் மாற்றுக் கட்சிகளை சேர்ந்த என 2,094 பேர் தி.மு.க.வில் தங்களை இணைத்துக்கொண்டனர்.

புதியதாக கட்சியில் சேர்ந்த அனைவருக்கும் பொன்முடி எம்.எல்.ஏ. சால்வை அணிவித்து வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

இது குறித்து வழக்கு பதிவு செய்த விழுப்புரம் தாலுகா காவல்துறையினர் ஊரடங்கு விதிமுறையை கடைபிடிக்காமல் அதிகளவில் பொதுமக்கள் கூட்டத்தை சேர்த்ததாகவும்,  144 தடை உத்தரவை மீறியதாகவும், நோய் தொற்று பரவும் என்று தெரிந்தே மக்களை கூட்டி கூட்டம் நடத்தியதாக திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி, முன்னாள் எம்.பி. லட்சுமணன் உள்ளிட்ட 317 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.