சொந்த ஊரை நெருங்கும் நேரத்தில் பலி.! சென்னையில் இருந்து இருசக்கர வாகனத்தில் வரும் போது சோகம்!
3 August 2020, 6:38 pmவிருதுநகர் : சென்னையிலிருந்து இரு சக்கர வாகனத்தில் வந்த வாலிபர் தனது ஊரை நெருங்கும் நேரத்தில் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மேல ராஜகோபாலபுரம் பகுதியை சேர்ந்தவர் பாண்டியராஜ் (வயது 32).இவர் சென்னையில் ஜவுளிக்கடை ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சத்திரப்பட்டியில் தனது சகோதரி வீட்டிற்கு வீட்டு பால் காய்ச்சும் விசேஷத்திற்காக சென்னையிலிருந்து பைக்கில் 1ஆம் தேதி கிளம்பியுள்ளார். அங்கிருந்து நேராக கடலூர் சென்று தனது மனைவி அக்சயாபானுவை அவரது வீட்டில் இறக்கிவிட்டு பின்னர் இரு சக்கர வாகனத்தில் கடலூரிலிருந்து சத்திரப்பட்டிக்கு சென்றுள்ளார்.
அப்போது ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மடவார்வளாகம் பகுதியில் செல்லும் போது அங்கு சாலையோரத்தில் இருந்த கல் மண்டபத்தில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு வந்த ஸ்ரீவில்லிபுத்தூர் நகர காவல் துறையினர் உடலை கைப்பற்றி ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரு சக்கர வாகனத்தில் சென்னையிலிருந்து வந்த வாலிபர் தனது சொந்த ஊரை நெருங்கும் நேரத்தில் உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.